பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



சோற்றுப்பை மூன்றையும் திடமாக வளர்த்து, எனது உயிரை வளர்த்தேன் என்கிறார் திருமூலர்.


உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே!


என்று தொடர்ந்து கூறுகிறார் திருமூலர். உடம்பினுக்குள்ளே உள்ள உறுபொருள் என்ன? அதுதான் நலம் எனும் நிறைபொருள்.


நோதலும், அது தணிதலும், அவற்றோரன்ன சாதலும் உடலுக்கு அமைந்த பாடுகள். அந்தப் பாடுகளும் கேடுகளும் புறம்போகுமாறு விலக்கி, வாழுகிற வளமான நிலையை விளக்கி, மக்களைக் காப்பதுதான் உடல்நலவியல் ஆகும்.


உடல் நல இயல் என்றால் உடல் நலம் பற்றிய இலக்கணம். உடல் நலத்திற்கேற்ற ஒழுக்கம் என்றும் கூறலாம்.


உடல் நலவியல் என்றால், உடல் நலம் பற்றிய பெருமை. (இயல் = இலக்கணம்), (வியல் = பெருமை) என்றும் பேசலாம்.


உடல்நலம் காக்கும் ஒழுக்கமும், உடல் நலம் சேர்க்கும் பழக்கமும் மனித தேவை மூன்றுக்குள் அடக்கம் என்பார்கள்.


இருக்க இடம், உடுக்க உடை, சுகிக்க உணவு.


இந்த மூன்றும் தான் சமுதாய அந்தஸ்தை அளிக்கிறது என்பது சம்பிரதாயம். அத்துடன், செளகரியமான ஆமோதிப்பும் கூட.


இருக்கும் இடத்தை வீடு என்றனர். வீடு என்றால் சொர்க்கம் என்றும், இன்பம் என்றும் கூறினர்.