பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எப்படி சேர்ப்பது?

பொருளைச் சேர்க்க அந்நாளில் புதுப் பாதையைக் கண்டார்கள் தமிழர்கள். 'திரை கடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற ஒரு புது மொழியையே படைத்து உலவ விட்டவர்கள் ஆயிற்றே நம்மவர்கள்!

தேகத்தில் சக்தியைச் சேர்க்க, வழிகளும் சொன்னார்கள். அத்தகைய வழிகள்தான் உடற்பயிற்சிகள். விளை யாட்டுக்கள் ஆகும்.

நலிந்த உடல் உள்ளவர்கள், நைந்து கிடப்பவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு ஆற்றாமை வந்து விடும். அந்த ஆற்றாமை இயலாமைக்குள் கொண்டுபோய் ஆழ்த்தும். இயலாமை சோம்பலுக்குள் கொண்டுபோய் செருகிவிடும்.

அதனால் தான் ஒளவை பாடினாள். சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

சோம்பலுக்கு ஒரு விளக்கம் கொடுத்த பழமொழியும் உண்டு. உழுது விதைக்கின்ற சமயத்தில் உட்கார்ந்து இருந்தவன், அறுவடை சமயத்தில் அழ வேண்டியிருக்கும்.

நல்ல நேரம்

அதுபோலவே, மனிதர்களுக்கு இளமைக் காலம்தான் செல்வத்தை சேர்க்கும் காலம். செல்வதைக் காக்கும் காலம். உடல்நலம், பலம் என்கிற செல்வத்தை சேர்க்கும் காலம்.

இளமையில் உடல் நலத்தை சேர்க்காதவன், முதுமைக் காலத்தில் முணுமுணுத்து, வெலவெலத்து, வருந்தியேவாழ்வான். வளைந்தே சாவான்.

இந்தக் கருத்தைத் தான் ஒளவை 'தேடாது அழிக்கின் பாடாய் முடியும்' என்றாள்.