பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

39



5.என்னை நன்றாக இறைவன் படைத்தனன்


பிறப்பும் இறப்பும்

பிறப்பு என்பது நாம் அறியாதது.

இறப்பு என்பது நமக்குப் புரியாதது.

இதுதான் நமது வாழ்வின் சிறப்பும் மறைப்பும் ஆகும்.

இந்த உயிர் வாழும் வாழ்க்கைக்கு முன்னே உறுதி தரும் ஒன்றாக, உண்மைப் பொருளாக, உயர்ந்த திருவாக விளங்குவது உடல்தான்.

உடலை வைத்துத் தான் இந்த உலக வாழ்க்கையே உலா வருகிறது.

உடலின் உண்மையை, உயர்ந்த நன்மையை, உணர்ந்த நமது முன்னோர்கள் உடலைப் போற்றினர். ஏற்றினர். உடல் காக்கும் உபாயங்களையும் சாற்றினர். சக்தியே அதன் அடிப்படை என்று சொற் பெருக்காற்றினர்.

உடல் வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே

என்று திருமூலர் பாடினார்.

ஏன் அப்படி என்று யாராவது கேள்வி கேட்பார் என்று அவருக்குத் தெரியும் போலும். அதற்காக, மேலும் இரண்டு வரிகளையும் சேர்த்துப் பாடிச் சென்றிருக்கிறார்.