பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

41




முழுமையான உடல்

முழுமையான உடல் என்பது, அமைப்பில் எந்தக் குறையும் இல்லாத உறுப்புக்களைக் கொண்ட உடலாகும். அப்படிப் பிறப்பது அரிது அரிது என்று ஒளவைப் பாடினாள்.

அரிது அரிது
மானிடராகப் பிறத்தல் அரிது
அதினிலும் அரிது
கூன் குருடு செவிடு
பேடின்றிப் பிறத்தல்

எந்தக் குறையும் இன்றி பிறப்பது அரிது. ஏதாவது ஒரு குறை ஒருவருக்கு நிச்சயம் உண்டு என்று இருந்தாலும், முழுமையாகப் பிறப்பது அரிய செயல். அதையே ஆண்டவன் செயல் என்று பேசிப் போற்றிப் புகழ்ந்து, பணிந்தனர் பண்புடையோர்.

ஏனென்றால், உடலில் குறைபாடு வந்து விடுகிற போதே, மனித உடலின் பெயரும் மாறிப் போகிறதே!

கண் குறையானால் குருடன்; காதில் குறையானால் செவிடன்; வாயில் மொழியில் இல்லையானால் ஊமை; நோயுடன் பிறந்தால், நோயாளி என்றெல்லாம் கூறப்படுவது நாம் அறிந்ததே!

புறநானூற்றுக் காட்சி

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் பெரும் புலவர் ஒருவர் செருகளத்தில் சிங்கமாகத் திகழ்ந்த சோழன் நலங்கிள்ளி என்னும் மன்னனைப் புகழ்ந்து பாடுவதாக, புறநானூற்றில் ஒரு பாடல்.