பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வெப்பத்தையும் தட்பத்தையும், வலிமையும் பல நிலையையும் அறிந்து கொள்ள சிறந்த பாதுகாப்பு உறுப்பாகவும் விளங்குகிறது.

அத்துடன், பேசி மகிழவும் உதவுகிறது.

நாக்கும் பேச்சும்

பேசுவதற்கு நாக்குப் பின்புலமாக பெருந்தளமாக விளங்குகின்றது என்றவுடன், எப்படிப் பேசவேண்டும் என்று நாக்குக்குப் பெருந்தடை விதித்தவர்கள் ஏராளம்.

எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர்கள் எண்ணிக்கையில் அடங்கார்.

'வாய்ப்பறை ஆகவும், நாக்கடிப்பு ஆகவும்'

என்று ஆதி வீர ராம பாண்டியர் தனது வெற்றி வேற்கை என்ற நூலில் இப்படி எழுதுகிறார்.

வாயை மேளம் என்கிறார். நாக்கை, மேளத்தைத் தட்டும் குச்சி என்கிறார்.

நா துடித்து அடித்து வாய் உட்புறமாகிய மேளத்தைக் கொட்டுகிற போது அதில் எழுகின்ற சத்தம், கேட்பவருக்கு இனிமையாக இருக்க வேண்டும், மன மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும். புத்துணர்ச்சியை ஊட்ட வேண்டும் பேரெழுச்சியை நீட்ட வேண்டும் என்பது தான் எல்லோரின் வேட்கையும் விருப்பமுமாகும்.

ஆனால், வாயிலிருந்து வந்து விழுகிற பேச்சின் வேகத்தில் விவேகம் இல்லை. மதியூகம் இல்லை. மனிதப் பாங்கே இல்லை என்பதால், ஒளவைப் பாட்டி தன் ஆத்திச் சூடிப்பாட்டில் நிறையவே குறைபட்டுக் கொண்டிருக்கிறாள்.