பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆதிபகவன் என்ற சொல்லானது மிகவும் பொருள் பொதிந்ததாக, அர்த்தச் சுரங்கமாகவே திகழ்கிறது.

பகவன் என்ற சொல்லுக்கு, கடவுள் என்று பொருள் கூறுவர். காணப்படுகிற உலகத்தில், காணப்படாத கடவுளே முதலாம் என்று பரிமேலழகரும் பொருள் கூறிப் போயிருக்கிறார்.

பகவன் என்ற சொல்லுக்கு கடவுள் என்பது ஒரு பொருள். அது பகவன் அல்ல; பகலவன் அதாவது சூரியனாக இருக்க வேண்டும். பகவன் என்றாலே சூரியனைத்தான் குறிக்கும் என்றெல்லாம் பொருள் கூறுபவரும் உண்டு.

'பகவு+அன்' என்று நாம் இந்த சொல்லைப் பிரித்தோமானால், பகவு என்ற சொல்லுக்கு, துண்டு, பங்கு, பிளப்பு, வெடிப்பு, பகு, பிளவு, பிரிவு, என்று பல பொருள்கள் இருப்பதை அறிகிறோம்.

உலகங்கள் பல ஒன்று சேர்ந்து அண்டியிருப்பதால், அண்டம் என்பார்கள். அதினின்றும் பிரிந்து விழுந்த மண்ணுலகை பிண்டம் என்பார்கள்.

இந்த அண்டத்தில் பிரிந்து நிற்கும். பெரிய துண்டான சூரியனை, பகவன் என்றுதான் நமது முன்னோர்கள் அழைத்திருக்க வேண்டும்.

பகவன் என்றால் சூரியன் என்றும், கடவுள் என்றும் பொருள் உண்டு.

பகலாகிய வெளிச்சத்தைப் பொழிகிற சூரியன், ஆதியில் தோன்றிய ஒன்று என்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

ஆதியிலே அதாவது முதலாவதாக சூரியன் வந்தது என்பதை விவிலியம் கூறுகிற விதத்தையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.