பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 இணைந்து கலந்து, வைட்டமின் D யை விளைவித்து விடுகிறது.

இதனால், வெயில் நல்லது. வெறுமனே நின்று கொண்டு வெயில் ஸ்நானம் செய்வதைவிட, விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று நமது அறிஞர்கள் அறிவுரை தந்தனர்.

கருமையான தோலானது, சூரிய ஒளியை அதிகமாகக் கிரகித்துக் கொள்கிற தன்மை இருப்பதால், கறுப்பாக இருக்கிறவர்களுக்கு, வைட்டமின் சக்தி கிடைப்பதுடன், வலிமையான எலும்புகளை வைத்துக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

ஆதிபகவன்

இந்தக் காரணங்களினால் தான், கவர்ச்சியான கொடையாளியாக, சூரியன் விளங்குவதால்தான்; உயிர்களின் வளர்ச்சிக்கு ஒப்பற்ற உதவியாக விளங்குவதால் தான், சூரியனை பகவான் என்று மக்கள் வாழ்த்தினர். வணங்கினர். விழா எடுத்து பெருமை சேர்த்தனர். சிலையாக வடித்து, தெய்வமாக்கி திருப்தி கொண்டனர்.

சூரிய வணக்கம் தமிழகத்தில் மட்டுமல்ல, கிரேக்கத்திலும், எகிப்திலும், பழங்காலந் தொட்டே பழக்கத்தில் இருந்து வருகிறது.

'ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்' என்று சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள், நமக்கு வழிகாட்டிப் பாடினார்.

ஞாயிறை நாம் நமக்குப் பயன்படுத்திக் கொள்ள, வெட்டவெளியில் வேலை செய்யலாம். அல்லது விளையாடலாம்.