பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



எதையாவது செய்து, எப்படியாவது பழத்தைப் பெற்றுவிடலாம் என்ற நப்பாசை, அவர்களின் மனதிலே, அளவுக்கு அதிகமாகவே இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த ஆசையின் வேகம், அவர்களுக்கு உள்ள கொஞ்சநஞ்ச விவேகத்தையும் கொன்று குறைத்து விடுகிறது.

குறியில்லாமல் கைத்தடியை வீசுவதுபோல; கொள்கையும், பயிற்சியும் முயற்சியும் இல்லாமல், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்!

முடிவு கைத்தடியை இழந்து தவிக்கும் குருடன் போல, இவர்கள் பண்ணிய பயிற்சிகள் எல்லாம் மண்ணாகிப் போகிற முடிவுகளைப் பெற்று, மனம் புண்ணாகிப் போய் ஒழிந்து போகின்றார்கள்.

நாய்க்குக் கிடைத்த தேங்காய் போல, இவர்களிடம் விளையாட்டுத்துறை அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறது.

'மாம்பழம் நோக்கி குருடன் வீசிய கைத்தடி போல,' என்று இன்னொரு உவமையையும், நாம் இனிமேல் கூறலாம்.

மேல்நாட்டு வீரர்கள், விளையாட்டில் மேன்மையடைகின்றார்கள், முதன்மைநிலை அடைகின்றார்கள் என்றால், அவர்கள் தங்கள் தேகத்தை பெரிதும் மதிக்கின்றார்கள்.

தங்களுக்குரிய திறமைகளை, தனிக் கவனத்துடன் தெரிந்து கொள்கின்றார்கள்.

தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வழிகளில், உழைப்பையும், முயற்சியையும் தொடர்புபடுத்தி, கருத்துடன் பின்பற்றுகின்றார்கள்.

விளையாட்டே தங்கள் வாழ்வு என்ற இலட்சிய வெறியுடன், கெட்டப்பழக்கங்களை எல்லாம், தாங்கள் வெற்றியை பெறுகிறகாலம் வரை ஒதுக்கி வைக்கின்றார்கள்.