பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

77


(நாகன்), விழிக்காற்று (சுர்மன்), கொட்டாவிக்காற்று (கிருகரன்), இமைக்காற்று (தேவதத்தன்), வீங்கற்காற்று (தனஞ்செயன்).

இந்தப் பத்துவகைக் காற்றும், இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடுநரம்பு, உள் நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, எருவாய் நரம்பு, கருவாய் நரம்பு என்னும் பத்து வகை நரம்புகளைப் பலப்படுத்தி, புலன்களை செழுமை பெறச் செய்கின்றன.

இப்படி, புலன்களை பதப்படுத்தி, பலப்படுத்தாது போனால், பலன்களைத் தராது, நம்மை பாடாய்படுத்திவிடும். பாழாய் ஆக்கிவிடும்.

அதனால், புலன்கள் எனும் பசுக்களை, வெறித்துத் திரியவிடாமல், கட்டிக் காத்து வரவேண்டும்.

இல்லையேல் என்ன ஆகும் என்ற கேள்விக்கு, திருமூலர் தருகிற பதிலைப் படியுங்கள்.

இந்த மனித வாழ்க்கை, ஒரு சூதாட்டம் போன்றது. நமது உடல்தான் சூதாடும் பலகை. ஐம்புலன்கள் ஐந்தும் சூதாடும் கருவி. இடம், வலம், நெற்றிநடு என்று மூன்று கண்களும் ஆடுகின்ற இடம். இப்படியெல்லாம் இருக்கின்றதுமான வாழ்க்கை.

இங்கே காமம், வெகுளி, மயக்கம் என்பவை, சிறுசிறு செடிகளாக உடம்பு முழுவதும் முளைத்துகிடக்கின்றன.

இவற்றை முளைக்கவிடாமல், அழிக்க முற்படுகின்ற ஆற்றலும் அதற்கான காரியங்களையும் செய்து, புலன்களை பெரும் பாதுகாப்பிற்குள் வைத்திருப்பவர்களே, பேரறிஞர்களாக, பெரும் சாதனையாளர்களாகத் திகழ்கின்றனர்.