பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

81


 காயமே இது மெய்யடா என்றதும், காற்றடைத்தப் பையடா என்றதும் ஒரு சில நினைவுகள் எழுந்ததைத்தான், இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


காயம் என்பதும் பை என்பதும் நம் உடம்பைத்தானே! உடம்புக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்றால் உடம்பின் உள்ளே உத்தமன் கோயில் கொண்டிருக்கிறான் என்பதால் தான். இந்தக் காயம் என்ற சொல் இருக்கிறதே! இதில் எவ்வளவு பெரிய அர்த்தங்கள் உண்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன? காயம் என்றால் புண் என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மைதான். தாயின் கர்ப்பத்தைக் காயப் படுத்திக் கொண்டு கருவாகி உருவாகி காயப்படுத்திய படி துடித்து வெளியேறி வந்ததால் தான் இதைக் காயம் என்று கூறியிருப்பார்கள் போலும்.


காயம் என்பது தோலில் ஏற்படுகின்ற சிராய்ப்புகளை, தோலிலே ஏற்படுகின்ற வடுக்களைத்தான் குறிக்கிறது. அவற்றையும் உள்காயம், வெளிக்காயம் என்றும் பிரித்துக் கூறுவார்கள்.


இப்படி ஏற்படுகின்ற காயங்கள் ஆறிப்போவதால், வடு மாறிப் போவதால், தான் காயமே இது பொய்யடா என்ற சித்தர்கள் பாடியிருக்கலாம். ஆனால் அவர்கள் கூறிய காயம் என்பது உண்மையல்லவா! நிதர்சனமாக நாம் வைத்துக் கொண்டிருக்கும் நிஜப் பொருள் அல்லவா!


காயம் என்ற சொல்லுக்கு மூலதனம் என்ற ஓர் அர்த்தம். நிலையானது என்றும் நிலைபேறு என்றும், உடல் என்பதும் அர்த்தங்கள். உடல் என்ற மூலதனத்தை வைத்துக் கொண்டு தான் நவரசங்களை வெளிப்படுத்துகிறோம். நயமான இன்பங்களை அனுபவிக்கிறோம். நாயகனான இறைவனுடன் தொடர்பு கொள்ளத் துடிக்கிறோம். இறையுணர்வு கொண்டு பெரு வாழ்வு வாழ்கிறோம் நாம்.