பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

83


 காய்தல் என்றால் என்ன அர்த்தம்? வயிறு பசியால் வருந்துதல், தேகம் தகித்தல், தனலால் வேகுதல், உலர்தல், மெலிதல், முதிர்ந்துபோகுதல் என்று அர்த்தம். மக்கள் பலரின் வாழ்க்கை, பசிக்கும், பதட்டத்துக்கும், பரபரப்புக்கும், படாத பாடுகளுக்கும் தானே ஆளாகிக் கொண்டிருக்கின்றது. இப்படித் தினம் தினம் காய்வதால்தான் பலரது தேகம் கன்றிப் போய்விடுகிறது. மனமும் குன்றிப் போய்விடுகிறது. வாழ்க்கையும் வெந்து போய்விடுகிறது.


மக்கள் பலரும் மிகுந்த பசி கொண்ட காய்பசி உள்ளவர் களாகவே வாழ்கின்றார்கள். அதனால்தான் அவர்கள் பழமாக வாழாமல் கிழமாகி கீழ் தரத்திற்கு ஆளாகிப் போகின்றார்கள்.


காயத்தை நாம் கண்போல காத்து வந்தால் அதுவே பெரும் காயமாக வளர்கிறது. பெருமை மிகுந்த உடம்பைத் தான் பெரும் காயம் என்றனர். இன்று இது பெருங்காயமாக மாறி பேசப்படுகிறது. மாற்றி மதிக்கப்படுகிறது.


ஒளிமிகுந்த, அழகு மிகுந்த உடலைத் தான் வெண் காயம் என்று அன்று போற்றினர். அதைத்தான் இன்று வெங்காயம் என்று இகழ்ச்சியாகப் பேசுகின்றனர்.


உடலானது உணவால் மட்டுமல்ல, காற்றால் தான் காக்கப்படுகிறது. அதனால்தான், உடம்பை காற்றடைத்தப் பை என்றனர். அதனால் தான் காற்றை பிராணன் என்றனர். உயிர் என்றனர். காற்றானது மூன்று நிமிடநேரம் மூளைக்குப் போகாவிட்டால் மரணம். பத்து நிமிட நேரம் தசைப்பகுதிக்குள் காற்று போகாவிட்டால் உயிருக்கு மரணம் என்றால், சோற்றைவிட, காற்று முக்கியமானதல்லவா!


அதனால்தான் நமது தேகம், காற்றை இழுத்து, அடைத்துக் கொள்ளும் பையாக விளங்குகிறது. அது ஒரு காற்றுப் பை மட்டுமல்ல. சோற்றுப்பை திறமைகள் ஊறும் ஊற்றுப்பை.