பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 அதெப்படி, ஆருயிர் பேருயிரோடு கலந்திட முடியும் என்ற ஓர் கேள்வி, அவசரமாக நமக்குள்ளே எழுகிறது. இது முடியுமா என்ற ஓர் ஐயமும் எழுகிறதே! நியாயம் தானே!


மனிதன் ஒருவன் மனிதனாக வாழ்கிறபோது அவன் மூன்று முக்கியமான, முதன்மை நிலைகளை அடைந்தே தீரவேண்டும். அப்படித்தான் வளரவேண்டும். முதிரவேண்டும்.


அவை வேகம் - விவேகம் - வியூகம்


இளமையில் வலிமை நிறைய உண்டு. அத்துடன் திறமையும், நோக்கத்தில் ஊக்கமும் கூடுகிற போது, வேகம் நிறையவே ஏற்படும். எண்ணத்தில் வேகம், செயல் வண்ணத்தில் வேகம் இதுதான் இளமை காலத்தின் வேகம். இளங்கன்று பயமறியாது என்பதுபோல, முனைப்பு ஏற்படும். அதற்கான முடிவைப் பற்றி அவர்கள் அதிகம் அக்கறை காட்டுவதில்லை.


செயல்பாடுகள் அதிகரிக்கிறபோது, சிந்திக்கின்ற அனுபவங்கள் அதிகமாகும். அனுபவங்கள் அறிவை மட்டு மல்ல, விவேகத்தையும் வளர்த்து விடுகின்றன. விவேகம் என்றால், ஆழ்ந்த யோசனை, அடக்கமான முயற்சி, ஆரவாரமற்ற கடமைகள், அனைவரையும் அனுசரித்துப் போகின்ற மனப்பக்குவம். இப்படி வருவது இளமைக்கும் முதுமைக்கும் இடைப்பட்ட காலம்.


வேகமும் விவேகமும் சேர்கின்றபோது, அங்கே வியூகம் அமைந்திடுவது இயற்கைதான். எந்த ஒரு காரியத்திற்கும் ஆழ்ந்த யோசனை, உள்ளுக்குள்ளே தர்க்கம், வாதம், நல்லது கெட்டது பற்றி ஆய்கின்ற சிந்தனை.


இப்படி படிப்படியாக வளர்கிறபோது, உடல் நலம் பெறுகிறது. உள்ளுக்குள்ளே ஆத்மா பலம் பெறுகிறது. வளமடைகிறது.