பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

91


உடலை உற்சாகமாக இயக்குகின்ற ஐம்புலன்களும், இஷ்டம் போல மேயாமல் அடங்கிக் கொள்கின்றன. புலன்கள் சாந்தம் அடைகின்ற போது உடலும் உயிரும் சந்தோஷமடைகிறது.

இப்படி நமது ஆருயிரை மகிழ்ச்சிப் படுத்துகின்ற செயல்கள், பிறர் பேசவராது, பிறர் வற்புறுத்த வராது.

தாங்களே இந்த உண்மையை உணர்கிறபோதுதான் உண்மைப்படுத்தும். உணர்ச்சிகள் பாடுபடும். உள்ளுறுப்புக்கள் உறவில் ஒருங்கிணைந்து, ஒரு முனைப்போடு செயல்படும். அத்தகைய அரிய வாய்ப்புள்ள வாழ்க்கைதான் ஆனந்தமான வாழ்க்கையாகும்.

பேருயிரைப் போய் நமது ஆருயிர் கலந்துவிடவேண்டும் என்று ஆசைப்படுவது தவறல்ல. அது மனிதனால் ஆகாத காரியம் அல்ல. ஆனால், பேருயிரை நினைத்து ஆருயிரை அவலங்களிலிருந்து தடுத்துக் கொள்ளலாம். தவிர்த்துக் கொள்ளலாம். தாக்குகின்ற துன்பங்களிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம்.

ஆக, ஆருயிரை மகிழ்விப்பது என்பது சிரமமான காரியம்தான். காமம், வெகுளி, மயக்கம் இவைதான் மனிதனை கலக்கி விடுகின்ற தீய குணங்களாகும்.

இம்மூன்றும் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்பார்கள். இந்த மூன்று குணங்களும் காட்டாற்று வெள்ளம்போல.

கரையைத் தாண்டுகின்ற காட்டாறு, கண்டதை யெல்லாம் அழித்துவிடும். கரைக்குள்ளே ஓடுகின்ற ஆறு, பாசனத்திற்கும் உதவும். தாகம் போக்கவும் உதவும். தாயாக இருந்தும் காக்கும்.