பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

95


இயற்கையாக இழுத்து விடுகிற காற்றின் கொள்முதலைத்தான் சுவாசம் என்றனர். தெரியாமல், சுவாசத்தைப் பற்றி அக்கரையும் ஆர்வமும் கொள்ளாமல், மூச்சை இழுத்து வெளியே விடுகிறபோதே, உடலில் உயிர்ப்புச் சக்தியுடன், ஆய கலைகள் அறுபத்தினான்கும் தங்குதடையில்லாமல் பொங்குமாகடல் போல் பெருகி வருகிறது என்கிறபோது, இன்னும் கொஞ்சம் கவனத்துடன், கலைஞானத்துடன் கருத்தைப் பதித்து சுவாசத்தை செய்தால் எப்படி இருக்கும்?

சும்மா காற்றை உள்ளே இழுத்து வெளிவிடுகிற செயலுக்கு சுவாசம் என்று பெயர். சுவாசத்தின் நன்மையைக் கருதி, மேன்மையை மனதில் ஏற்றிக் கொண்டு தெளிவாக சுவாசிப்பதற்குப் பெயர் பிராணாயாமம் என்பதாகும்.

ஆக, சுவாசத்தை நயமாக, நளினமாக, நல்விதமாகச் செய்வதை பிராணாயாமம் என்றனர்.

சுவாசத்தில் இரண்டு விதமான காரியம் நடக்கும். பிராணாயாமத்தில் நான்கு விதமான காரியங்கள் நடை பெறுகின்றன.

காற்றை மூக்கு வழியாக உள்ளிழுப்பதும். பிறகு வெளியே விடுவதும் சுவாசம் ஆகும். ஆனால், காற்றை உள்ளே இழுப்பது, காற்றுப் பைக்குள் கொஞ்ச நேரம் கட்டுப் படுத்திவைப்பது, பிறகு மெதுவாகக் காற்றை வெளியே விடுவது அதன்பிறகு, எந்த செயலும் செய்யாமல் சும்மா இருப்பது. இப்படி நான்கு விதமாக செயல்பட்டு, காற்றை உள்ளுக்குள் கட்டுப்படுத்தி, காரியமாற்றச் செய்கின்ற வித்தையைத்தான் பிராணாயாமம் என்றனர்.

காற்றை உள்ளே இழுப்பதற்குப் பெயர் பூரகம். பூர்+அகம் என்று இதைப்பிரிக்கலாம். அகத்துள் பூரணமாக, அதாவது நிறைய காற்றை இழுப்பதற்குத் தான் பூரகம் என்று பெயர்.