பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

95


மக்களுடை சொற்களைக் கேட்டால் செவிகளுக்கு மட்டுந்தான் இன்பம். ஆனால் அவர்கள் உடலைத் தீண்டினால், உடலுக்கும் உள்ளத்திற்கும் இன்பம் என்கிறார், உலகப் பொதுமறை தந்த பொய்யா பெருந்தகை வள்ளுவர். ஆகவே, கலை, மக்கள் உள்ளத்தைத் தொட்டாலன்றி பயனற்றதாய், காட்டில் காய்ந்த நிலவாக, கற்பாறையில் விதைத்த விதையாக, கடலில் பெய்த மழையாகப் போய்விடும்.

ஒவ்வொரு நாட்டிலும் கலையை வளர்த்து வெளியுலகுக்குக் காட்டவில்லையானால், கண்ணாடி அறையிலிருந்து பேசுகின்றவனுடைய பேச்சை வெளியே இருப்பவர்கள் கேட்கமுடியாமல்போய், அவன் வாயசைப்பதை மட்டிலும் பார்த்துக்கொண்டிருப்பதைப்போன்ற நிலையேதான் ஏற்படக்கூடும்.

ஆகவே கலை பொதுமக்களுக்கு மாத்திரம் பயன்படவில்லை. அரசர்களுக்கும், அவர்கள் ஆண்ட காலத்துக்கும் அவர்கள் வகுத்திருந்த அரசியல் முறைகளுக்கும் பயன்பட்டிருக்கிறது. உதய கால கவிஞர்கள் முதல் இன்றைய புரட்சிக் கவிஞர்கள் வரை, ஓவிய புலவர்களுக்கு, சிந்தனையாளர்களுக்கு, சீர்திருத்தவாதிகளுக்கு, மிகவும் பயன்பட்டிருக்கிறது. ஒரு நாடு வீழ்வதற்கும் அந்த நாட்டின் கலையே பயன்பட்டிருக்கிறது.

மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் பலவற்றுள் ஒரே ஒரு நாடகம் இருந்தாலும் நாங்கள் எங்கள் நாகரீகத்தைக் காப்பாற்றிக்கொள்வோம் என்று ஆங்கிலப் பெருமக்கள் சொல்வதும், தத்துவஞானி சாக்ரடீஸ் தந்த அரிய கொள்கைகள் அகிலத்தில்