பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இலங்கை எதிரொலி.

18—4—53ல் கொழும்பு நகர இரத்தின பூங்காவில் இலங்கை மத்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மணி அவர்கள் தலைமையில் அளித்த வரவேற்புக்கு அளித்த நன்றியுரை.

தலைவர் அவர்களே! தோழர்களே! உங்களனைவர்க்கும் தென்னாட்டின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வணக்கம். நான் நேற்று இரட்மலானா விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, பல நிருபர்கள் என்ன சந்தித்து தாங்கள் இரண்டு மணி நேரத்தில் திருச்சியிலிருந்து வந்துவிட்டீர்கள் அல்லவா, உங்கள் நாட்டில் ஜனநாயகம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்று கேட்டனர். நான் இங்கே வந்து சேர்ந்ததாகத் தாங்கள் கருதிக்கொண்டிருக்கும் இரண்டு மணி நேரத்திற்கும், எங்கள் நாட்டில் இன்று இயங்கிக்கொண்டிருக்கும் ஜன நாயகத்திற்கும் மிக்க தொடர்புஉண்டு என்றேன்; கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவேண்டுமென நிருபர்கள் கேட்டனர். விளக்கத்தையல்லவா கேட்கின்றீர் கேளுங்கள்! நான் இரண்டு மணிநேரத்தில் வந்துவிட்டதாக முன்னே குறிப்பிட்டிருந்தீர்கள். ஓரளவுக்கு அது உண்மைதான் என்றாலும் எங்கள் நாட்டு ஜனநாயக முறைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் இரண்டு மணி நேரத்தில் இங்கே வரவில்லை. 14 மாதங்களாக பிரயாணம் செய்திருக்கின்றேன். அதாவது 1952 பிப்ரவரி திங்கள் பாஸ்போர்ட் வாங்கினேன். விஸா ஒருதரம் மறுக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலங்கை_எதிரொலி.pdf/9&oldid=1321220" இலிருந்து மீள்விக்கப்பட்டது