பக்கம்:இளந்தமிழா.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரும் பதிப்பிற்கு ஆக்கியோன் உரை ஆரும் பதிப்பு என்றவுடனே தனிப்பட்ட ஒர் உவகை பிறக்கின்றது. கவிதையைத் தமிழ் மக்கள் மதித்துப் போற்றுகிருர்கள் என்ற உள்ளக் கிளர்ச்சியிலே அந்த உவகை பீரிட்டு எழுகின்றது என்று சொல்லவா வேண்டும்?

 ரசிகமணி டி. கே. சி. அவர்களின் தலைமைச் சீடராகிய டாக்டர் ஜஸ்டிஸ் மகராஜன் அவருக்கே உரிய கவிதைப் பாணியில் இப்புதிய பதிப்பிற்கு அருமையான முகவுரை வழங்கியிருக்கிருர்கள். அவருக்கு என் மனங்கனிந்த நன்றி உரியது.
 பெரும்பாலும் புதுப்புது யாப்பு முறைகளைக் கையாண்டு இந்தக் கவிதைகளை வடித்துள்ளேன். சில கவிதைகள் இருந்த இடத்தில் புதிய கவிதைகளைப் பெய்திருக்கிறேன். பல பழைய கவிதைகளும் திருத்தம் பெற்றிருக்கின்றன. கவிதை யின் சிறப்பை ஒங்கச் செய்வதே என் குறிக்கோள். இது புது நூல் என்றுகூடக் கூறலாம்.
 இலக்கியத்திலே கவிதை முதலிடம் பெறுகின்றது. சொற் செறிவிலா, அரவ வனப்பிலா, சந்த இனிமையிலா, யாப்பு வடிவத்திலா, அணி அலங்காரத்திலா, கற்பனைத் திறத்திலா, கவிஞனுடைய உள்ள ஒளியிலா-இவையெல்லாம் சேர்ந்த பாகுக் கலப்பிலா என்று அறுதியிட்டுக் கூற இயலாத ஒரு மாய விஞ்சை கவிதைக்குண்டு.
 ஆனால் பரபரப்பு வேகத்திலே கவிதையை முழுமையாகச் சுவைக்க முடியாது. நிதானமாக அசை போட்டுப் பழகிக் கொள்ள வேண்டும். இதுவே கவிதையை அனுபவிக்கும் ஒரே வழி; வேறுவழி இல்லை. அவசரம் மிகுந்து வரும் இக்காலத்தில் இதைச் சொல்லத்தான் வேண்டும்.

இப்புதிய பதிப்பை நன்கு உருவாக்கி வெளியிடும் வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி. 25-3-89 பெ. தூரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/10&oldid=1358725" இலிருந்து மீள்விக்கப்பட்டது