பக்கம்:இளந்தமிழா.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிழவியும் ராணாவும்

குன்றுக் கூட்டச் சரிவினில் ஒண்டியாய்க்
குச்சு வீடொன்று தென்படக் கண்டதும்
சென்று வாயிற் கதவினைத் தட்டினன்
செரு விழந்தவத் தேயத்து மன்னனே.

நடை தளர்ந்தமூ தாட்டியும் மெல்லவே
நடை திறந்தனள் உற்றுற்று நோக்கினாள்;
விடை பகர்ந்திலன் மன்னவன் உட்சென்றான்,
விாித்த ஓலைத் தடுக்கினில் சாய்ந்தனன்.

தோற்றம் கூறக் கிழவியும் பால் கனி
சொல்லு முன்பு முன் வைத்து வணங்கியே,
“ஆற்றல் மிக்கவிந் நாட்டின் அதிபரோ?
அடியன் கண்டதென் புண்ணியம்" என்றனள்.

"நேற்று நாள்வரை உன்றன் அரசன் நான்
நிலை குலைந்து படையுந் துறந்தின்று
காற்று வாக்கில் துரும்பென வந்துளேன்;
கனியும் பாலும் எனக்கெதற்?" கென்றனன்.

"போா் புாிந்த களைப்பெல்லாம் ஆறியே
புதிய வெற்றிக்கு ஏகவே" என்றனன்;
"ஆரு மற்ற அனாதையாய் இங்கு நான்
அடைந் தனன்இனிப் போரை விரும்பிடேன்;

"நாட்டை நீங்கிப் பயணமாய்ச் சிந்துவாம்
நதியைத் தாண்டித் தொலைவினில் போகவே
ஓட்ட மாகவே வந்தனன்; சூறையில்
ஒண்ட நல்லிடம் தந்தனை வாழ்" கென்றான்.


117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/119&oldid=1361651" இலிருந்து மீள்விக்கப்பட்டது