பக்கம்:இளந்தமிழா.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாணல்


நானொரு சிறு நாணல் - இதன்
நல்லிசை இன்னுயிா் நீயன்றோ?
கானகப் புதா் மறைவில் - மடுக்
கரையிலோ மூலையில் நின்றிருந்தேன்
வானகம் போற்றிடவும் - இவ்
வையகம் புகழ்ந்துமே வாழ்த்திடவும்
தேனென நீ புகுந்தாய்-பல
தீஞ்சுவைப் பாடல்கள் பாடவைத்தாய்

என்குரல் கேட்டவா்கள் - உளம்
ஏற்றமே கொண்டிட நீகுறித்தாய்
தென்மொழிப் பேரமுதும் - சில
திசைமொழிச் செழுமையும் விாித்திடவே
இன்னருள் கூட்டி விட்டாய் - அதற்
கென்னதான் மா தவம் செய்தன்னோ?
கன்னலென்பாா் பலரும் - உயா்
கம்பனும் உளமகிழ் பொழிவிதென்பாா்

கொஞ்சியே பேசுதென்பார்-மதுக்
குழைத்தநல் நிலவுமே நாணுமென்பார்
அஞ்சன வண்ணனவன்-பேர்
அணிநலம் காட்டவே ஆனதென்பார்
தஞ்சம்நீ என்றுனையே-சிரம்
தாழ்த்தியே இசைசுரந் தேத்திடுவேன்
நெஞ்சிலுன் பதம் உறையும்-நல்
நிறைவுடன் தழையவே வாழ்வருள்வாய்




135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/137&oldid=1359918" இலிருந்து மீள்விக்கப்பட்டது