பக்கம்:இளந்தமிழா.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதைச் சொல்

பண்ணின் எழில் வீச்சில்
பளிச்சிடுமின் தோற்றம்போல்
பைந்தருவின் நீழலிலே
படிந்துள்ள தண்மையைப் போல்

எண்ணப் பெருங்குகையில்
இருள்படிந்த மூலையிலே
எழுந்தாடும் உருவறியா
ஓவியங்கள் எத்தனையோ!

வண்ணக் கருத்தும் உயர்
வாய்மைநிறை குறிக்கோளும்
வடிவில்லா தேங்கினவே
வாய்த்தசொல்லைக்காணாமல்.

மண்ணிற் குரம்ஊட்டும்
விண்ணமுதச் சொல்பெற்றால்
மனச்சுடரை வடித்தெடுத்து
வைத்திடுவேன் கவிதையிலே

கண்ணிற் படா திருந்த
கலைமணியாம் அஜந்தாவின்
எண்ணரிய ஓவியம்போல்
எங்கும் ஒளி வீசிடுமே.



48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/50&oldid=1460155" இலிருந்து மீள்விக்கப்பட்டது