பக்கம்:இளந்தமிழா.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிக்கனல்

அம்புக்கு வில் சிறை. வில் அம்பைக் கட்டுப்படுத்துகிறது. வில்லைவிட்டு வெளியேறிய போது தான் அம்புக்கு விடுதலை. எண்ணங்களுக்கும், உள்ளக் கிளர்ச்சிகளுக்கும் சொல்லே சிறை. சொல்லையுங் கடந்து உள்ளத்தோடு உள்ளம் பேசுகின்ற உணர்ச்சித் துடிப்பிலே கவி சொல்ல ஆசை.

வில்லெனும் சிறைக் கட்டினை-நீங்கி
வேகங் கொண்டுபாய் அம்பு போல்
சொல்லையுங் கடந் தேகுமோர்-உள்ளத்
துடிப்பிலே கவி சொல்லுவேன்

மின்னல் பேரொளி கொண்டவன்-வெறும்
மேகக் குப்பையை நாடுமோ?
கன்னல் தேனினை உண்டவன்-அந்தக்
கசட்டுச் சக்கையைத் தேடுமோ?

வானப் பூக்களைக் காட்டியே-நல்ல
வையப் பூக்களைக் கூட்டியே
கானத் தீஞ்சுவை ஊட்டியே-வீசுங்
காற்றின் மூச்சினை நாட்டியே

சீறு நாகத் திரையினில்-கடல்
சேரும் நீலப் பரப்பினில்
ஆறு பாய்ந்திடும் ஓசையில் - மலையின்
அசைவிலாத மிடுக்கினில்


49

இ. - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/51&oldid=1460156" இலிருந்து மீள்விக்கப்பட்டது