பக்கம்:இளந்தமிழா.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

மழலைச் சொல்லும் உடைய பச்சைக் குழந்தையைப் பற்றிப் பாடுகின்றார்; பாருங்கள்:

“பச்சைக் குழந்தை என்றால்-எனக்கொரு
பாசம் பிறக்குதம்மா-அதன்
கொச்சை மழலையிலே-உளந்தான்
கொஞ்சிக் களிக்குதம்மா”

என்ற பாட்டிலமைந்த உணர்ச்சி நம் உள்ளத்தை அள்ளுகின்றதன்றோ? சின்னஞ்சிறு குழந்தையொன்று வீதியிலே நின்று அம்மா அம்மா என்றழைத்து, விம்மி விம்மி விழிநீர் பெருக்கி, முத்து முத்தாகக் கண்ணீர் வடிக்கக் கண்டபோது இக்கவிஞர் பாடிய பாட்டு நம்முள்ளத்தையும் கரைக்கின்றது.


“தெய்வச் சுடர்க் குழந்தை
சிரித்த முகம் பொலிவிழந்து
நையக் கண்டால் உள்ளம்
நடுங்கு கின்றதென் செய்கேன்?
கன்னத்தில் முத்து திரக்
கவலை யிருள் தான்படர
என்னத்துக் காக இந்த
இளங் குருத்து வாடினதோ”

என்று இரங்குகின்றார் கவிஞர். அழுகின்ற குழந்தையைக் கண்டால் தெய்வமும் இரங்கி அருள் சுரக்குமே என்று கூறுகின்றார். முன்னொரு நாள் குளக்கரையில் நின்று அழுத குழந்தையைக் கண்டு ஆற்றாது வெளிப்பட்டுப் பாலடிசில் ஊட்டிய பார்வதியம்மையின் செயலை அதற்கு ஒரு சான்றாகக் காட்டுகின்றார்.

குழந்தையின் துயரம் கண்டு தரியாத கவிஞர் உள்ளம் ஒரு பறவைக் குஞ்சையும் கண்டு உருகுகின்றது. காக்கை கூடு கட்டியிருந்த மரத்தின் அடியில் மாண்டு கிடந்தது ஒரு குயிற் குஞ்சு. கரும் பட்டுப்போன்ற அதன் அருமையான உடலைக் கொத்தித் துளைத்திருந்தது காக்கையின் மூக்கு. இக் கொடுமையைக் கண்டு கொதித்தது கவிஞர் உள்ளம். இளவேனிற்காலத்தில் மாஞ்சோலையில் மறைந்திருந்து இங்கிதமாகப் பாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/6&oldid=1314352" இலிருந்து மீள்விக்கப்பட்டது