பக்கம்:இளந்தமிழா.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இருளும் ஒளியும்

அன்பே
நீ உனது அன்புக் கதிர்களை நீட்டினாய்
நான் உன்னுள் மறைந்து விட்டேன்
உன்னுள் நான்
என்னுள் நீ
உலகம் இதைக் காணமுடியாது
உன்னை ஒருபுறத்திலும் என்னை ஒரு புறத்திலுமே காண்கிறது
ஆனால்
ஞாயிறும் இருளும் போல
நாம் ஒன்றாகவே இருக்கின்றோம்.

குறிப்பு : காதலால் தூண்டப்பெற்ற உள்ளம் என்னவெல்லாம் கற்பனை செய்து கொள்ளுகிறது! அதன் கற்பனைக்கும் குமுறலுக்கும் ஓய்வுண்டா? எல்லைதானுண்டா? நவநவமாய்க் கற்பனைகள்! நவநவமாய்க் குமுறல்கள்!

பிரிவேற்படும் போது வாடித் துடிக்கிறார்கள் காதலர்கள். பிரிவால் அவர்களுக்கு உலகமே சூனியமாகி விடுகிறது. ஆனால் ஒவ்வொரு சமயத்திலே பிரிவிலும் தாங்கள் ஒன்றாக இருப்பதாகவே அவர்கள் உள்ளத்தில் கற்பனை எழுகின்றது. இயற்கைக் காட்சிகள் அந்தக் கற்பனைக்குத் துணைபுரிகின்றன.

பிரிவால் நலிந்த ஒரு காதலி காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் கதிரவனையும் இருளையும் பார்க்கிறாள். காலையிலே கதிரவனே வரவேற்று அவன் மேலே எழுந்து வரவரப் பின் வாங்குகிறாள் இருளரசி. மாலையிலே இருள் முன்னேறக் கதிரவன் மெதுவாக மறைகின்றான். ஒளியுள்ள போது இருளில்லை: இருளுள்ளபோது ஒளியில்லை என்று பொதுவாக உலகம் எண்ணினாலும், கதிரவனும் இருளரசியும் உலகைச்சுற்றி பவனி வரும் போது அவர்கள் ஒருவரையொருவர் பிரியாது தழுவிக் கொண்டே இருப்பதாகத் தோன்றுகிறது. காலைக் காட்சியும் மாலைக் காட்சியும் இந்த எண்ணத்திற்கு வலிமை தருகின்றன. பிரிவால் வாடும் அவளுக்கு இந்த எண்ணம் மகிழ்ச்சியளிக்கிறது. அது காதலனுக்கு ஒரு கடிதமாக உருவெடுக்கிறது.


69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/71&oldid=1460165" இலிருந்து மீள்விக்கப்பட்டது