பக்கம்:இளந்தமிழா.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனங் கசந்து போனதுவோ

அன்பின் திறங்காட்டி
    அனைவருக்கும் சுகம் பெருக்க
இந்நிலத்திற் கேகவைத்தாய்
    எத்தனை பேர் என்னிறைவா!
ஆசியநற் சோதியென
    அன்று வந்தார் ஒரு புத்தர்;
ஏகமுனி பின் வந்தார்
    எருசலத்தின் தவப் பயனாய்--
எம்மிடையே காந்தி வந்தார்
    இன்னருளின் குரல் கேட்டோம்.
மும்மதிகள் சூழ்ந்தொளிரும்
    மும்மணிகள் பல கண்டோம்.
ஐயனுரை பாரிலெங்கும்
    அசோகன் பரப்பியபின்
மெய்யினிலே ஆணியிட்டார்
    வீணர் கிறிஸ்து நாதருக்கு.
இந்தியமண் மீதது போல்
    என்றேனும் நிகழ்ந்திடுமோ
என்றுரைத்துப் பெருமை கொண்டோம்.
    இந்நாளில் தலைகுனியப்
பாரதத்தின் தந்தையவர்
    பைங் குழந்தை நெஞ்சினிலே
ஈரமிலா வெறிக்கிறுக்கால்
    ஈயமிட்டுப் பழிகொண்டோம்.

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/87&oldid=1359462" இலிருந்து மீள்விக்கப்பட்டது