பக்கம்:இளந்தமிழா.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அடிமையின் வேண்டுகோள்


வறுமையும் பிணியும் மனைதனில் புகவும்
சிறுமைநான் செய்தேன், தேனினும் இனிப்பினாள்
மறுகிட ஒருநாள் குடிவெறி மயக்கினால்
தடிகொண் டடித்தேன்; சத்தியம் தவறினேன்,
கடையிருந் தால் நான் கடைத்தேற லேது?
பிடியதி லிருந்து பிழைத்திட வேரறாரு
வழியெனக் கில்லை; மக்களின் சார்பாய்
அரசியல் நடாத்தும் அறிஞரும் இந்த
அரக்கனை இன்னும் அழித்திடா தேனோ
இங்கும் அங்குமாய்த் தடைவிதிக் கின்றார்!
அதனால் வரும்பணம் அடிமையென் போல்வார்
குழந்தைகள் வயிற்றினில் கொட்டிய நெருப்பிலும்
முதிர்நடை தளர்ந்த முதியோர் பதைப்பிலும்
மதிநிகர் மனைவியின் வாடிடும் நெஞ்சினில்
பாய்ச்சிய தீயிலும் பண்ணிய தல்லவோ?
பணமிதைக் கண்ணினால் பார்க்கவும் தகுமோ?
வழியினிற் கடைவலை வைத்தெமைப் பிடிக்கும்
வழிப்பறிக் குதவியாய் வாழ்வதோ அரசு?
சிந்தையை மயக்கித் திருடிடும் பொருளால்
நாட்டினை ஆண்டிடும் நாகரிகத் தோரே!
நொந்திடும் ஏழையின் நிந்தையும் சாபமும்
கள்ளுப் பணத்தினில் கண்டறி யீரோ?
ஆதலால் மதுவாம் அரக்கனை இன்றே
மாய்த்திடுவீரே? மதியிழந் துள்ளோர்
விலங்கினை உதறி விழிபெற்று
நலங்குலை யாமல் நாட்டினில் வாழவே.


குறிப்பு : அரசாங்கத்தார் சில மாவட்டங்களில் மட்டும் மதுவிலக்கை அமலுக்குக் கொண்டுவந்து மற்ற இடங்களிலும் அதைக் கொண்டு வருவதா, கொண்டு வந்தால் வருவாய் குறையுமே என்று எண்ணித் தயங்கிய காலத்தில் பாடியது.


92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/94&oldid=1460166" இலிருந்து மீள்விக்கப்பட்டது