பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

47


கேட்டநூல்கள் குறித்தவிலைக்கு, கிழியாமலும் அழுக்கடையாமலும் நல்ல நிலையில் வந்திருக்கின்றனவா என்று சரி பார்த்தல் வேண்டும். பதிப்பாளர்தம் விலைச்சீட்டு அதற்குரிய விலைச்சீட்டுப் பேரேட்டில் பதியப்பட்ட பின்னர் அதிலுள்ள மொத்தவிலை அதற்கு நேரே பதியப்படும். அதன்பின் நூல்கள் நூலக முத்திரையிடப்பட்டு நூலடங்கலில் பதியப்பட வேண்டும். பதிவெண் நூலின் தலைப்புப் பக்கத்தின் பின்புறம், நூலில் உள்ள படங்கள், நூலின் கடைசிப்பக்கம் ஆகிய மூன்றிடங்களில் குறிக்கப்படும். இந்த எண் விலைச்சீட்டிலும் குறிக்கப்படும். பின் விலைச்சிட்டு தலைமையாசிரியர்க்கு அனுப்பப்பட்டு இறுதியில் கணக்கருக்குச் செல்லும். அவர் அதனைச் சரிபார்த்துப் பணத்தை நாணயமாகவோ, சீட்டாகவோ தருவார்; அவ்வாறு தரும்பொழுது நூலகத் தலைவரிடமும் தலைமையாசிரியரிடமும் ஒப்புதல் பெறுவார். பின் பணத்தைப் பெற்றமைக்கு ரசீது வாங்கப்பெற்று ஆண்டுக் கணக்குக்குத் தயாராக வைக்கப்படும். விலைச்சீட்டின் மொத்தத் தொகையின் மூலம் அந்த ஆண்டு நூலகத்துக்காகச் செலவழிக்கப்பட்ட தொகையின் அளவு தெரியும்.


2. பதிவு செய்தல்

பணம் கொடுத்தோ அன்பளிப்பாகவோ வாங்கப்பட்ட நூல்களைப் பதியும் ஏடு நூலடங்கல் ஆகும். அவ்வப்பொழுது வாங்கி வாங்கி வைக்கப்பட்ட நூல்களின் விவரங்களைக் கொண்டது இவ்வேடு. இந்தப் பதிவேட்டின் உதவியால் நூலகத்திலுள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கையை எளிதில் அறிந்து கொள்ளலாம். இதுமட்டுமன்று. நூலகத்துக்காகச் செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பதையும் இதன்மூலம் அறியலாம்.