பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.அணிந்துரை

மக்களின் மனக்கோட்டம் போக்கும் மாண்புடையவை நூல்களேயாகும். இத்தகைய நூல்கள் நிலைபெற்றிருக்கும் இடங்கள் நூலகங்களாகும். அவை ஆன்று அவிந்து அடங்கிய சான்றேர்களுக்கு ஒப்பாகும். உலகின் பல இடங்களிலும் தோன்றி வளர்ந்த பல கலைகளின் இருப்பிடம் நூலகமேயாம். சுருங்கச் சொன்னல், ஒவ்வொரு நூலகமும் ஒரு பல்கலைக் கழகம் எனலாம். கல்லூரிகளையும் பள்ளிகளையும் அழகு செய்வன ஆங்கு அமைந்து விளங்கும் நூலகங்களே. மக்களது கவலையைப் போக்கி மகிழ்ச்சியை ஊட்டும் மாண்புடையவை நூலகங்கள்.

நமது நாடு உரிமை பெற்றபின் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். கல்வித்துறையில் நாம் இன்று அடைந்துள்ள முன்னேற்றம் சிறப்புச் சுட்டுக்குரியதாகும். ஊருக்கொரு பள்ளியும் தெருவுக் கொரு படிப்பகமும், நகர்ப்புறத்தேயன்றி நாட்டுப் புறத்தும் தோன்றியுள்ளன. அரசாங்கம் நூல்லகச் சட்டம் ஒன்றினை இயற்றி மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கமும் ஆக்கமும் உதவிவருகிறது. இந்நிலையில் நூலகத்தைப்பற்றிய எல்லாச் செய்திகளையும் அறிந்துகொள்ள வேண்டிய இன்றியமையாமை நமக்கு ஏற்பட்டுள்ளது. நூலகத்தின் இன்றியமையாமை, அமைப்பு முறை, அலுவலர் கடமை, அதிகாரிகளின் பொறுப்பு, மாணவர் கடமை, மக்கள் ஒத்துழைப்பு முதலிய பலதிறப்பட்ட செய்திகளையும் அறிந்து கொள்வது மிக்க பயனுடையதாகும். இவ்வரிய செய்திகளை அறிந்து பயன் அடையத்தக்க நூல்கள் மிகக் குறைவு; குறிப்பாகத் தமிழ்மொழியில் கிடைப்பது மிகவும் அரிது. இக்குறையைப் போக்கும் வகையில் என் நண்பர் திரு. அ. திருமலைமுத்துசுவாமி அவர்கள் சில நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள். இவ்வரிசையில் இப்போது வெளிவரும் 'உயர்நிலைப்பள்ளி நூலகம்' என்னும் இந்நூல் ஆசிரியரின் சிறந்த படைப்பாகும்.