பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்நூலுள் பள்ளி நூலகத்தின் இன்றியமையாமை, அதற்குரிய கட்டட அமைப்புமுறை, நூல்களை வரிசைப்படுத்தும் முறை, நூல்நிலையத் தலைவரின் தகுதி, மாணவர்களும் மக்களும் நூலகத்தைப் பயன்படுத்தும் முறை முதலிய பல செய்திகள் தெளிவாகவும் சுவையாகவும் கூறப்பட்டுள்ளன. தமிழ்மொழியில் இத்தகைய நூல் இதுகாறும் வெளிவந்ததில்லையெனின் அது மிகையாகாது. ஆசிரியரின் ஆங்கில மொழி அறிவும், தமிழ்ப் புலமையும் இணைந்து இந்நூலில் தொழிற்பட்டுள்ளன. பொது நூலகத்தின் சிறப்பினை இவ்வாசிரியர் விளக்கியிருக்கும் பகுதி சுவையாகவுள்ளது. 'ஒரு பாடத்தைப் படிக்கும்பொழுதே மற்றொரு பாடநூலில் விருப்பம் எழல் குழந்தையுள்ளத்தின் இயல்பாகும். அக்காலை அந்நூல் பிறிதொரு வகுப்பறையில் இருக்குமானல், தடையுண்டாகிக் குழந்தையின் அறிவுத்தாகம் அடங்காது. நாளடைவில் அறிவுத்தாகமே எழாமற் போய்விடும். இத்தகைய தடை ஏற்படாதவாறு செய்வது பொது நூலகமே."

இந்நூல் உயர்நிலைப்பள்ளிக்கே சிறப்பாக எழுதப்பட்டிருப்பினும் கல்லூரி முதலிய பல்வேறு கல்விநிலையங்களுக்கும், ஊராட்சி, நகராட்சி மன்ற நூல் நிலையங்களுக்கும், படிப்பகங்களுக்கும் பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ளமை போற்றுதற்குரியது. அனைவரும் படித்தறிய வேண்டிய சிறந்த நூல் இது. நூலகக்கலை பயிலும் மாணவர்களுக்கும் பொதுவாகப் பள்ளி மாணவர்களுக்கும் பாடநூலாக அமையத்தகும் சிறப்பும் உடையது. ஆசிரியரின் முயற்சி இத்துறையில் மேலும் சிறக்க வேண்டுகின்றேன்.

'தாயகம்'

இங்ஙனம்,

காந்தி நகர், மதுரை.

நா.பாலுசாமி.