பக்கம்:உரிமைப் பெண்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துாரப் பிரயாணம்

97

 நடந்த சம்பவத்தை இன்னுமா அந்த நாய் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறது? நானே மெதுவாக அவனை மறந்துகொண்டிருக்கிறேனே!

இருந்தாலும் அந்த எண்ணம் என் உள்ளத்தில் எப்படியோ நிலைத்து வலிமை பெற்றுக் கொண்டிருந்தது கடைசியாக இடுகாடு சென்று பார்த்துவிடலாமென்றே தீர்மானம் செய்து கொண்டு புறப்பட்டேன்.

ராஜாமணியைப் புதைத்த அதே இடத்தில் சடையன் படுத்திருந்தது. துாரத்தில் போகும்போதே அதைக் கண்டு நான் கூப்பிட்டேன். ஆனால் அது எழுந்து வரவில்லை. ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதுபோல் காணப்பட்டது. சற்று அருகே சென்று அழைத்தேன். அசையவே இல்லை. ஒரு வேளை பசி மயக்கமாக இருக்கலாமோ?

அருகில் சென்று உற்று நோக்கினேன். சடையனும் துாரப் பிரயாணம் போய்விட்டது. ராஜாமணி வந்து அதைக் கூட்டிக்கொண்டு போயிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது அவனைப் புதைத்த இடத்திற்கு வந்திருக்காது. இருவரும் இப்பொழுது சதா இன்பத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்களென்று நம்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/102&oldid=1138262" இலிருந்து மீள்விக்கப்பட்டது