பக்கம்:உரிமைப் பெண்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தந்தை சொல்

“காதலாவது மண்ணாங்கட்டியாவது? இதெல்லாம் சுத்த முட்டாள் தனம்” என்றார் ஒரு வழுக்கைத் தலையர்.

நாம் சொன்னால் யார் கேட்கிறார்கள்? இந்தக் காலத்துப் பையன்களுக்கு நம் பேச்சு ஏற்கிறதா என்ன?” என்று பதில் கொடுத்தார் ஒரு தொந்திக்காரர்.

“இந்தச் சினிமா வந்ததிலிருந்து பையன்களே கெட்டுக் குட்டிச்சுவராகப் போய்விட்டார்கள்” என்றார் வழுக்கைத் தலையர், தலையைத் தடவிக்கொண்டே.

“பையன்கள் மட்டுமா? பெண்களுந்தான்” என்று எதிரொலித்தார் மற்றவர்.

“காலங் கெட்டு எல்லாம் தலைகீழாய் நடக்கிறது” என்று பெருமூச்சுவிட்டார் முன்னவர்.

இரண்டு மனிதர்களும் காவிரி ஆற்றங்கரையிலே வெண்மணல் மேட்டிலே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இருவரும் எதிர்வீட்டுக்காரர்கள்; நீண்ட நாள் நண்பர்கள். மாலையிலே உலாவுவதற்காக இருவரும் சோடியாகப் புறப்படுவார்கள். காவிரியாற்றங்கரையில் கால் வலிக்கும்வரை நடந்துவிட்டுக் கடைசியாக அந்த மணல் மேட்டிலே வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அம் மணல்மேடு அவர்களுடைய குடும்ப ரகசியங்களையும் இன்ப துன்பங்களையும் தினமும் கேட்டிருக்கிறது. அவர்களுக்குள்ளே ஒளிவு மறைவு என்பது கிடையாது; தாராளமாக எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/103&oldid=1535131" இலிருந்து மீள்விக்கப்பட்டது