பக்கம்:உரிமைப் பெண்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

உரிமைப் பெண்

 “இந்தக் காலத்திலே பணந்தான் பிரதானம்; பணமில்லாது போனால் நாய்கூட மதிக்காது” என்று வழுக்கைத் தலையர் தம் உள்ளக் கருத்தை வெளியிட்டார்.

“உலக அநுபவம் பணத்தை நாடுகிறது; இளமை காதலை நாடுகிறது” என்று இந்தச் சமயத்திலே யாரோ ஒருவர் தமக்குத் தாமே சொல்லிக்கொண்டார்.

நண்பர்கள் இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுக்குப் பக்கத்திலேயே மணல் பரப்பிலே ஒரு புது மனிதர் அமர்ந்திருந்தார். தங்கள் பேச்சிலேயே முழுகியிருந்தபடியால் இவர்கள் அவர் வந்ததைக் கவனிக்க வில்லை. அவரைப் பார்த்ததும் இவர்கள் தங்கள் பேச்சைச் சற்று நேரம் அப்படியே நிறுத்திக் கொண்டார்கள். அதையறிந்த புதியவர், நான் இங்கே இருப்பதால் உங்களுக்கு ஏதாவது இடைஞ்சலாக இருக்கிறதோ?” என்று கேட்டார்.

“அப்படி ஒன்றும் நாங்கள் ரகசியம் பேசவில்லை" என்றார் வழுக்கைத் தலையர்.

“நீங்கள் யோசிக்கிற மாதிரிதான் நானும் ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் அன்றைக்குச் செய்த தீர்மானம் என் வாழ்க்கையையே கெடுத்து விட்டது” என்று அந்தப் பெரியவர் பெருமூச்சுவிட்டார். சுருக்கு விழுந்து உலர்ந்திருந்த அவர் முகத்தில் தீராத துன்பத்தின் சாயல் நன்கு படிந்திருந்தது. வெளுத்துப் போயிருந்த அவர் தலை ஊசிக்கட்டைப் புல் முளைத்த பாழுங்காடு போலத் தோன்றிற்று.

நண்பர்கள் இருவருக்கும் அவருடன் பேசி விஷயம் முழுவதையும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையுண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/105&oldid=1138273" இலிருந்து மீள்விக்கப்பட்டது