பக்கம்:உரிமைப் பெண்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை சொல்

103

 ளிலே படித்தவர்கள் மிக அருமை. அதனால் அவர் எனது சாதாரண நிலையையும் பொருட்படுத்தாது என் மகனுக்குப் பெண் கொடுக்க விரும்புவதாக ஒரு பந்துவின் மூலம் குறிப்பாகச் சொல்லியனுப்பினார். எனக்கு அவருடைய செல்வத்திலே இச்சை பிறந்துவிட்டது. எதிர்பாராமல் வலியக் கிடைக்கவிருக்கும் சீதேவியைத் தள்ள மனம் வருமா? அவர் மகளை என் மகனுக்கு மணம் செய்துகொண்டால் அவருடைய சொத்து முழுவதும் எங்களுடையதாகிவிடும். பெண்ணும் நல்ல அழகும் குணமும் உள்ளவள் என்று தெரிந்துகொண்டேன். ஆகையால் அந்த ஏற்பாட்டிற்கு உடன்பட்டேன். அது பற்றி என் மகனுக்கும் உடனே எழுதினேன். நான் எதிர்பார்த்தபடி அவன் அந்தக் கல்யாணத்திற்கு மகிழ்ச்சியோடு இணங்கவில்லை. கல்யாணத்திற்கு அவசரம் ஒன்றும் இல்லை யென்றும் ஒருவனுடைய வாழ்க்கையிலேயே கடைசிநாள்வரையிலும் பங்கெடுத்துக் கொள்ளுகிறவளைத் தேர்ந்தெடுப்பதில் நிதானம் வேண்டுமென்றும், பணத்தை நினைத்து முடிவு செய்யக்கூடாதென்றும் அவன் எனக்குக் கடிதம் எழுதினான். அன்று முதல் அவன் எழுதிய ஒவ்வொரு கடிதத்தையும் நான் என்னுடனேயே வைத்திருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக உங்களுக்குப் பொருத்தமான இடத்தில் படித்துக் காண்பிக்கிறேன். நான் சொல்லுவதைவிட என் மகனுடைய உள்ளத்தை அக் கடிதங்கள் நன்றாக எடுத்துக் காட்டும்” என்று சொல்லி விட்டு அவர் தம் சட்டைப் பையில் நன்றாகக் கட்டிவைத்திருந்த ஒரு காகிதக் கட்டை எடுத்தார். அதிலிருந்து ஒரு கடிதத்தை ஜாக்கிரதையாகத் தேடி எடுத்து வாசிக்கலானார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/108&oldid=1138276" இலிருந்து மீள்விக்கப்பட்டது