பக்கம்:உரிமைப் பெண்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

உரிமைப் பெண்

 'அன்புமிக்க தந்தை அவர்களுக்கு, எனது பணிவுள்ள வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தங்கள் நிருபம் கிடைத்து விஷயம் தெரிந்தேன். நான் இன்னும் எனது படிப்பைப் பூர்த்தி செய்யவில்லை. அதோடு எனக்கு வயது ஒன்றும் அதிகமாகிவிடவில்லை; இருபதுதான் நடக்கிறதென்பது தங்களுக்குத் தொிந்ததே. அதனால் இப்பொழுது கல்யாணத்தைப் பற்றி எண்ண வேண்டியதே இல்லை யென்று தோன்றுகிறது.

மேலும் கல்யாணம் என்பது ஒரு பெரிய காரியம். அவசரப்பட்டுத் தீர்மானம் செய்துவிட்டால் வாழ்க்கை முழுவதுமே வருந்தவேண்டி நேரலாம். தெய்வாதீனமாக ஆண் பெண் இருவருக்கும் திருப்தியாக முடிந்து விட்டால் நன்மைதான்; இல்லாவிட்டால் ஆயுள் முழுவதும் துன்பப்பட வேண்டிவரும். ஒரு தடவை செய்வதை மறுபடியும் மாற்றுவதென்பதும் இயலாது. அதனால் நிதானமாக ஆலோசனை செய்து திருமண விஷயத்தை முடிவு செய்யவேண்டும் என்று நான் கருதுகிறேன்.

மேலும் வாழ்க்கை இன்பத்திற்குப் பணம் பிரதானம் அல்ல. எளிய வாழ்க்கையிலும் மனமொத்திருந்தால் அதுவே இன்பம் கொடுக்கும். செல்வம் மிகுந்திருங்தாலும் கருத்தொருமித்து வாழாத வாழ்க்கை நரக வேதனை யாகிவிடும். இவையெல்லாம் தங்களுக்குத் தெரியாதவையல்ல. ஆதலால் இப்பொழுது கல்யாணத்தைப் பற்றி யாதொரு முடிவும் செய்யவேண்டாமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். தாங்கள் குறிப்பிடும் பெண் வீட்டார் உடனே உங்களுடைய அபிப்பிராயத்தைச் சொல்லவேண்டுமென்று கேட்பதானால் வேறு இடத்தில் ஏற்பாடு செய்து கொள்ளும்படி தயவுசெய்து தெரிவித்து விடுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

தங்கள் அன்புள்ள மைந்தன்,
ரங்கசாமி.’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/109&oldid=1138277" இலிருந்து மீள்விக்கப்பட்டது