பக்கம்:உரிமைப் பெண்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

உரிமைப் பெண்

 “கல்யாண ஏற்பாட்டை நிறுத்த வேண்டுமென்று அவன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். அதோடு அவன் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அவளையே மணந்து கொள்வதாக வாக்களித் திருப்பதாகவும் கூறினான். எனக்கு அந்தச் செய்தி கலக்கத்தை உண்டாக்கிற்று. பக்கத்து ஊர்க்காரருடைய செல்வத்தின்மேல் விழுந்த ஆசையால் எனக்கு வேறெதுவும் சரியென்று படவில்லை. அதனால் காதலைப் பற்றி மிகவும் இழிவாகப் பேசினேன். எத்தனையோ பேர் காதலென்று மதிமயங்கிப் பின்னால் துன்பத்திற்குள்ளானதை யெல்லாம் எடுத்துக் காட்டினேன். மேல் நாடுகளிலே ஆணும் பெண்ணும் தாங்களே சம்பாதித்துக் கல்யாணம் செய்துகொண்டாலும் அங்கேதான் விவாகரத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன வென்றும் சொன்னேன்.

“இக்தனை கஷ்டப்பட்டு உன்னைப் படிக்க வைத்ததற்குப் பலன் இதுதான? என் விருப்பத்தை மீறி நீ எவளையாவது கல்யாணம் செய்து கொள்வதானால் நான் உன் முகத்திலேயே விழிக்கமாட்டேன்; உயிரை வேண்டுமானாலும் விட்டுவிடுவேனேயொழிய உன் விட்டில் காலெடுத்து வைக்கமாட்டேன். படாத பாடெல்லாம் பட்டுப் படிக்க வைத்த தகப்பனை அந்திய காலத்தில், அநாதையாக விட்டுவிட்டாய் என்ற பேச்சை நீ கேட்க வேண்டிய காலம் கட்டாயமாக வரப்போகிறது” என்று கடுமையாகப் பேசினேன்.

“அப்பா, நீங்கள் என்னிடம் இப்படிக் கோபமாகப் பேசலாமா? நான் ஒன்றும் அபசாரம் செய்துவிட வில்லையே!” என்று அவன் அழுத குரலில் சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/115&oldid=1138382" இலிருந்து மீள்விக்கப்பட்டது