பக்கம்:உரிமைப் பெண்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை சொல்

111

 “நான் பெண் வீட்டாருக்கு உறுதி சொல்லியாய் விட்டது. நீ என் மகனாக இருந்தால் அதைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் என் முன்னால் நிற்க வேண்டாம்; எங்கேயோ போ” என்று பதற்றமாக மொழிந்தேன்.

“மகன் திகைத்துப் போய்விட்டான். அவனால் மேற்கொண்டு பேச முடியவில்லை. ஒரு நாள் கூட என் சொல்லைக் தட்டியறியாதவனுக்கு எப்படித்தான் பேச முடியும்? பேசாமல் தலையைக் குனிந்துகொண்டு நின்றான். நான் மேலும் மேலும் ஆத்திரத்தோடு வார்த்தை சொன்னேன்.

“அப்பா, எனக்கு ஒரு நான்கு நாள் அவகாசம் கொடுங்கள். அதன் பிறகு எல்லாம் முடிவு செய்து கொள்ளலாம் என்று இரங்கிய குரலில் கேட்டுக் கொண்டு ரங்கசாமி வெளியே சென்றான், அன்றும் மறுநாளும் அவன் சாப்பிடவே இல்லை. அது எனக்கு வருத்தமாகத்தானிருந்தது. இருந்தாலும் எல்லாம் சரிப்பட்டுப் போகுமென்று இருந்தேன். நீண்ட கடிதம் ஒன்று யாருக்கோ எழுதிவிட்டு அதற்குப் பதிலை எதிர் பார்த்திருந்தான். மூன்றாம் நாள் பதிலும் வந்துவிட்டது. அதில் என்ன எழுதியிருந்ததோ எனக்குத் தெரியாது. அதைக் கிழித்துத் தீயில் போட்டுவிட்டு ரங்கசாமி என்னிடம் வந்து, அப்பா, உங்கள் இஷ்டம்போல் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனான். அவன் கண்களிலே கண்ணீர் பிதுங்கிக் கொண்டிருந்தது. ஒரு கணம் என் உள்ளம் திடுக்கிட்டது. அவன் கண்ணீர் விடுவதை நான் கண்டதே இல்லை. கொஞ்ச நாளில் அந்த விசனம் தீர்ந்து போகும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/116&oldid=1138384" இலிருந்து மீள்விக்கப்பட்டது