பக்கம்:உரிமைப் பெண்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

உரிமைப் பெண்

 ஆ! என்ன அதிசயம்! யார் அங்கே வருகிறது? அவனுக்குப் பாவாத்தாள் வருவது எப்படித் தெரியும்? நெஞ்சோடு நெஞ்சம் பேசிக்கொண்டதா? நிலாப் பெண் தாது சென்றாளா? இளமைக் துடிப்பு ஒரே மாதிரி எண்ணத்தை இருவர் உள்ளத்திலும் ஒலித்ததா? காளியப்பன் பாவாத்தாளைத் தேடிக்கொண்டு எதிரே வருகிறான்!

கட்டுக்கடங்காத இளமை, அது துணிச்சல் மிக்கது. புதிய அநுபவங்களையெல்லாம் ஆவலோடு எதிர்பார்ப்பது. பின்னால் விளையப் போவதை எண்ணிப் பார்க்காதது. இருவரும் எதிர்பாராது சந்தித்து நிலவு மயக்கத்திலும் இளமைத் துடிப்பிலும் புதுமை இன்பம் கண்டார்கள்.

காளியப்பன் பாவாத்தாளையேதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று ஒரே பிடிவாதம் பண்ணுகிறான். அவன் பெற்றோர்க்கு இது பெரிய வித்தையாக இருக்கிறது. எங்கேயாவது இப்படிக் கேட்டதுண்டா?

அவனுக்கென உரிமையாக வளர்ந்த அத்தை மகள் பருவமடைந்து காத்திருக்கிறாள். அத்தையும் அடிக்கடி வந்து சிக்கிரம் கல்யாண ஏற்பாட்டைச் செய்யும்படி வற்புறுத்திக்கொண்டிருக்கிறாள். சீர் சிறப்பு, நகை நட்டு முதலான விவகாரங்களை யெல்லாம் திருப்தியாகப் பேசி முடித்தாகிவிட்டது. எல்லோருக்கும் வேலைவெட்டி இல்லாத சமயம் பார்த்துக் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறபோது, மேகமில்லாமல் இடியிடித்ததுபோலக் காளியப்பன் இவ்வாறு குறுக்கே பேச ஆரம்பித்துவிட்டான்.

“வெளியே சொல்லாதே. ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிந்தால் நம் மதிப்பே போய்விடும். எல்லோரும் சிரிப்பார்கள்” என்று தாய் அடக்க முயன்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/127&oldid=1138431" இலிருந்து மீள்விக்கப்பட்டது