பக்கம்:உரிமைப் பெண்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அவள் வளர்த்த கடாரி

“வள்ளியாத்தா, படுக்கப் போகிறதற்கு முன்னே கட்டுச்சோறு கொஞ்சம் கட்டி வையம்மா; நாளைக்கு நேரத்திலே சந்தைக்குப் போகவேனும்” என்று வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக்கொண்டே வீரப்பன் சொன்னான். நாள் முழுவதும் கூலிவேலை செய்துவிட்டு வந்த அவன் களைப்பாறக் குடிசைத் திண்ணையின் மேல் உட்கார்ந்திருக்கிறான். அவன் மகள் வள்ளியாத்தாள் உள்ளே வேலை செய்துகொண்டிருக்கிறாள். எங்கிருந்தோ மாயமாக வந்து இருள் பாவிக் கொண்டிருந்தது.

“எந்தச் சந்தைக்குப் போகிறீர்கள்? துடியலூருக்கா?” என்று வேலை செய்துகொண்டே கேட்டாள் மகள்.

“ஆமாம், நாளைக்குக் திங்கட் கிழமையல்ல? இந்தக் கடாரியைச் சந்தைக்குக் கொண்டு போகலாம்னு இருக்கிறேன்.”

"என்னத்துக்கையா அதை இப்போ விற்கவேனும்? இன்னும் ரெண்டு மூன்று மாசம் போனால் கன்றுப் போடுமே?”

"ஆமாம், கன்றுப் போட்டால் எச்சு விலைக்குத்தான் போகும். ஆனால் செலவுக்கு அவசரமாகப் பணம் வேணுமே?”

“இப்போ என்ன அப்படிச் செலவு?” என்ற யோசனையுடன் கேட்டாள் மகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/15&oldid=1136750" இலிருந்து மீள்விக்கப்பட்டது