பக்கம்:உரிமைப் பெண்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் வளர்த்த கடாரி

13

 முடியவில்லை. அந்த நிலையில் தன் மகளுக்கு வயது வந்தவுடன் எப்படிக் கல்யாணம் செய்ய முடியும் என்று அவன் எண்ணமிடலானான். அவனுக்கு ஒரே மகள் தான் இருக்கிறாள். அவளுக்கு மரியாதையான முறையில் சீரெல்லாம் செய்து மணம் முடிக்க வேண்டுமல்லவா? இருநூறு முந்நூறு ரூபாய்கூட இல்லாமல் அதை எப்படிச் செய்வது? இந்த எண்ணம் அவனை வாட்டத் தொடங்கியது. தன் மகளைக் கூலி வேலைக்குப் போகும்படி சொல்லவும் அவனுக்கு விருப்பமில்லை.

பல நாட்களுக்குப் பிறகு அவனுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றிற்று. அதன்படி அவன் ஒரு கடாரிக் கன்றை முப்பது ரூபாய் கொடுத்து வாங்கி வந்தான். அது நல்ல மயிலை; காங்கயம் வர்க்கத்தைச் சேர்ந்தது. பெரிதானால் முந்நூறு நாநூறு என்று விலைக்குப் போகும். வீட்டு வேலைகளை யெல்லாம் செய்துவிட்டு மற்ற நேரத்தில் வள்ளியாத்தாள் அதை மேய்த்து வரலானாள். சில நாட்களிலேயே அவளுக்கு அதன் மேல் அளவில்லாத பிரியம் ஏற்பட்டு விட்டது; மிகுந்த சிரத்தையோடு அதை வளர்த்து வந்தாள். மூன்று ஆண்டுகளிலே அது நல்ல அழகான கடாரியாகி ஈனும் பருவத்தை அடைந்து விட்டது.

அதை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வள்ளியாத்தாளுக்கு அடுத்த மாதத்தில் கல்யாணத்தை முடித்து விடுவதென்று வீரப்பன் இப்பொழுது தீர்மானம் செய்திருக்கிறான். தன் தங்கை மாராயியின் மகனுக்கே உரிமைப் பெண்ணாகக் கொடுத்து விடுவதென்று ஏற்பாடாகி விட்டது. ஆனால் அதைப்பற்றி மகளிடம் அவன் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை. வேறு எல்லா விஷயங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/18&oldid=1136754" இலிருந்து மீள்விக்கப்பட்டது