பக்கம்:உரிமைப் பெண்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

உரிமைப் பெண்

 புலியின் மீது பயமில்லாமல் காலை ஊன்றி நின்று கையிலே துப்பாக்கியையும் பிடித்துக்கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ளுவார்கள்.

இருபத்தைந்து நாட்களுக்கு முன்னாலே சீமானுார் ஜமீன்தார் புவிவேட்டைக்குச் சுந்தரத்தை அழைத்த போது அவனுக்கு அளவுக்கு மீறி உற்சாகம் வந்துவிட்டது. சில மாதங்களாக அவனுக்கு இப்படி நல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதோடு மற்றொரு முக்கிய காரணமும் இருந்தது. தீபாவளிக்குத் துணிமணிகள் வேண்டும். இந்த வேட்டை வெற்றிகரமாக முடிந்துவிட்டால் அதற்குக் கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டிலே மனைவி மக்களுக்குத் திருப்தியாக எல்லாம் நல்ல பட்டாகக் கிடைத்து விடும்.

இப்படி நினைத்துக்கொண்டு அந்த ஷிகாரி வேட்டைக்குக் கிளம்பினான். வருவாயிலே அதிக நாட்டம் வைத்ததனாலோ என்னவோ அன்றைய இரவு வேட்டை உயிருக்கே ஆபத்தைக் கொண்டுவரக் கூடிய அவ்வளவு சங்கடமானதாகப் போய்விட்டது.

முன் நிலாக் காலமாதலால் அடர்ந்த அந்த நீலகிரிக் காடுகளிலும் சுந்தரம் எளிதாக வழி காட்டிக்கொண்டு சென்றான். சுமார் ஒரு மைல் நடந்த பிறகு அவன் ஜமீன்தாரையும் அவரோடு வந்த நால்வரையும் அங்கே ஏற்படுத்தப்பட்டிருந்த ஒளியிடங்களுக்குள்ளே தங்கும்படி செய்தான். நல்ல பத்திரமான இடங்கள். மேலும் அந்தப் பக்கத்திலே புலிகளின் நடமாட்டம் அநேகமாகக் கிடையாது. வேட்டைக்காரர்களின் ஆர்ப்பாட்டம் அங்கே அதிகமாக இருந்ததால் மான்கள்கூட அந்த வழியாகப் போவதைத் தவிர்த்துவிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/33&oldid=1137167" இலிருந்து மீள்விக்கப்பட்டது