பக்கம்:உரிமைப் பெண்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

உரிமைப் பெண்

 களுக்குப் பொறுப் புணர்ச்சியே கிடையாது” என்று சீறுவார். வேலை நேரம் தவிர மற்ற நேரத்தில் அவர் தாராளமாகச் சிரித்துக்கொண்டு பேசுவதுண்டு. ஆனால் வேலையில் மட்டும் வெகு கண்டிப்பு. கீழ் உத்தியோகஸ்தர்களெல்லாம் அவரைக் கண்டால் பயந்து கிடப்பார்கள். அத்தனை மரியாதை. பாங்கு மானேஜருக்கும் டைரக்டர்களுக்கும் அவரிடத்திலே மிகவும் பிரியமும் மதிப்பும் உண்டு.

“நடராஜ பிள்ளை முப்பத்தைந்து வருஷம் அந்தப் பாங்கிலே வேலை பார்த்தார். வேறு இடத்திற்குப் போகலாமென்று அவர் நினேக்கவே யில்லை. அப்படி நினைத்திருந்தால் அதிகச் சம்பளங்கூடக் கிடைத்திருக்கும். அவர் அதை விரும்பவில்லை. நாணயம் தவறாமல் கடைசி வரையில் ஒரே இடத்தில் வேலை செய்வதென்று அவர் தீர்மானம் பண்ணியிருந்தார்.

“அதனால் அவர் தமது 53 ஆவது வயது முடிந்ததும் ஒய்வெடுத்துக்கொள்ள விரும்பியபோது அந்தப் பாங்கு டைரக்டர்கள், மானேஜர், குமாஸ்தாக்கள் முதலிய மற்ற ஊழியர்கள் அனைவரும் ஏகோபித்த மனத்துடன் அவருக்கு ஒரு நிதியளிக்கவும், பிரிவுபசாரம் செய்யவும் முன்வந்தார்கள்.”

“நடாாஜ பிள்ளை ஒரளவு பணம் சேமித்து நீண்டகால டிபாசிட்டுகளாகப் பல பாங்குகளில் போட்டு வைத்திருந்தார். தமது வருவாயிலிருந்தே சொந்த வீடு ஒன்றும் கட்டிக் கொண்டார். பாங்கிலிருந்து விலகிய பிறகு தலயாத்திரை போய்விட்டு வந்து தமது இறுதி நாட்களை அமைதியாகக் கழிக்கவேண்டுமென்பது அவருடைய எண்ணம். பூச்செடிகள் வைத்து வளர்ப்பதிலே அவருக்குப் பிரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/49&oldid=1137253" இலிருந்து மீள்விக்கப்பட்டது