பக்கம்:உரிமைப் பெண்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெரிது ?

51

 நடராஜ பிள்ளை சாட்சி சொல்லிவிட்டு வேறொரு பஸ்ஸில் ஏறிக் காரியாலயம் சேருவதற்கு மணி 10½ ஆகிவிட் டது. இருந்தாலும் என்ன? ஒருநாள்தானே தாமதம்? அதுவும் அவர் பிழையினால் ஏற்பட்டதல்லவே? பெட்டியிலுள்ள கையிருப்புப் பணத்தை இதற்குள் யார் பார்த்திருக்கப் போகிறார்கள்? கொடுக்கல் வாங்கலும் 10½ க்குப் பின் தானே? இவ்வாறு அவர் எண்ணமிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவர் உள்ளத்தைத் திருகிவிட்டது. இரும்புப் பெட்டியின் கதவு திறந்திருந்தது. நோட்டுக் கற்றைகள் கீழே கிடந்தன. மானேஜர் அவற்றைக் கவனமாக எண்ணிக் கொண்டிருந்தார். நடராஜ பிள்ளையின் இருதயம் அப்படியே நின்று விடும்போல இருந்தது.

“அவரைக் கண்டதும், ‘வாருங்கள்’, ஏன் இன்றைக்கு என்றும் இல்லாதபடி தாமதம்?” என்றார் மானேஜர்.

“பஸ்ஸில் வரும்போது வழியிலே ஒரு விபத்து....” என்று மென்று விழுங்கிக்கொண்டே நடராஜ பிள்ளை பதிலளித்தார்.

“ஆமாம், பணம் இரண்டாயிரம் குறைச்சலாக இருக்கிறதே! பத்தாயிரம் ரூபாய் உடனே வேண்டுமென்று மானேஜிங் டைரக்டர் சொல்லி அனுப்பினர். அதனால் தான் வந்ததும் பெட்டியைத் திறந்து பார்த்தேன். இருப்புச் சரியில்லையே?”

“என்ன பதில் அளிக்கிறதென்று நடராஜ பிள்ளைக்குத் தெரியவில்லை. ஒரு நாளும் இம்மாதிரியான குற்றம் செய்யாதவராகையால் அவருக்கு உடனே ஒன்றும் சொல்லத் தோன்றாமல் விழித்தார். உடம்பெல்லாம் குப்பென்று வேர்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/56&oldid=1137325" இலிருந்து மீள்விக்கப்பட்டது