பக்கம்:உரிமைப் பெண்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

உரிமைப் பெண்

 “ஒரு நாளைக்குத்தான் நனஞ்சுபோனா என்ன தாத்தா? நான் என்ன கருப்பட்டியா? கரைந்தா போவேன்?”

“ஐயோ, வாண்டாம்மா, நனையவேபடாது.”

"ஏன் தாத்தா, மழை வந்தபோதெல்லாம் இப்படியே சொல்றீங்க? உங்களுக்கென்ன மழையென்றால் இத்தனை பயம்?”

“ஆமாம், பயந்தானம்மா பயந்தான்.”

“என்னத்துக்குக் தாத்தா பயம்? எனக்கொன்றுமே தெரியவில்லையே?” என்று சுள்ளிகளைக் கையில் எடுத்துக் கொண்டு வந்து கதவருகே நின்ற மாராயி கேட்டாள்.

“அதுவா? அதை ஏன் கேட்கிறாய்? நான் பொல்லாத பாவி” என்று கிழவன் பெருமூக்சு விட்டுக்கொண்டு மெதுவாகக் கூறினான். அவன் குரலிலே சோகம் தொனித்தது. கையிலிருந்த சுருட்டு நழுவித் தரையிலே விழுந்தது. அதன் உயிர் போய்விட்டது.

விறகை அப்படியே குடிசைக்குள் போட்டுவிட்டு மாராயி தாத்தாவிடம் வந்து நின்றாள்.

“தாத்தா, என்னவோ ஒரு விசனம் உங்கள் மனசிலே இருந்துகொண்டே இருக்கிறது. அடிக்கடி இப்படி நீங்கள் பெருமூச்சு விடுவதை நான் பார்க்கிறேன். ஏன் தாத்தா, உங்களுக்கென்ன விசனம்?” என்று ஆவலோடு அவள் வினவினாள்.

இதற்குள்ளே பெரிய மழை ஆரம்பித்துவிட்டது. திண்ணை யெல்லாம் சாரலடித்தது. “மாரு, வா, உள்ளே போகலாம். சாப்பிட்டுவிட்டு, படுத்துக்கொண்டே பேசுவோம்” என்று கிழவன் உள்ளே நகர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/67&oldid=1137924" இலிருந்து மீள்விக்கப்பட்டது