பக்கம்:உரிமைப் பெண்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள் நெருப்பு

3

 அவனே அங்கேயே அநாதையாக விட்டுச் சென்றதாகச் சில முதியவர்கள் கூறுவார்கள். அதைப் பற்றி யாருக்கும் நிச்சயமாக ஒன்றும் தெரியாது. ஏழு வயதுச் சிறுவனாக இருந்த அவன் மேல் அந்த ஊர்ப் பெரிய பண்ணைக் காரரான முத்துசாமிக்கவுண்டர் இரக்கங் கொண்டார். தம் வீட்டிலேயே அவனுக்கு இடமளித்தார். நாளடைவில் சொங்கப்பன் அவருடைய பண்ணையிலே ஒரு நல்ல வேலையாளாகிவிட்டான். சிறுவனாக இருக்கும்போது மாடு மேய்க்கும் வேலையை அவனுக்குக் கொடுத்தார்கள். இப்பொழுது பண்ணையிலே அவன் செய்யாத வேலை கிடையாது.

சாப்பிடுவதில் போலவே வேலை செய்வதிலும் சொங்கப்பன் கெட்டிக்காரன், “நாலாள் வேலையை அவன் ஒருத்தனே செய்துவிடுவான்” என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள்.

அவனுக்கு முத்துசாமிக்கவுண்டர் வீட்டிலே சோறு; பண்ணையிலே வேலை. நன்றாகச் சாப்பிடுவது, நன்றாக வேலை செய்வது—இதுதான் அவனுடைய தினசரி வாழ்க்கை. வேலையில்லாத சமயத்தில் எப்பொழுதாவது அவன் ஊர் மத்தியில் வேப்பமரத்தைச் சுற்றிக் கட்டியிருக்கும் மேடையிலே வந்து கொஞ்ச நேரம் உட்காருவான். அந்தச் சமயத்தில்தான் அவனை எல்லோரும் கேலி பண்ணுவது, சண்டைக்கிழுப்பது, வம்புக்கிழுப்பது, கல்யாணப் பேச்சுப் பேசுவது—எல்லாம்.

அவன் வாழ்ந்த இந்த நாற்பத்திரண்டு வருஷங்களில் ஒரு நாளாவது அவனுக்குக் கோபம் வந்ததை யாரும் கண்டதேயில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/8&oldid=1136591" இலிருந்து மீள்விக்கப்பட்டது