பக்கம்:உரிமைப் பெண்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ராதா

ழக்கம் போல இன்றும் மோதி விழுந்து ரெயிலுக்குள் ஏறினேன். நிற்பதற்கு இடம் கண்டுபிடிப்பதற்குள் காரமடை ஸ்டேஷனைவிட்டு ரெயில் நகர்ந்து விட்டது. அப்பொழுதுதான் அவளுடைய குரல் கணீரென்று ஒலித்து என்னைத் துாக்கி வாரிப்போட்டு ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. ஆமாம், அது அவளுடைய குரலேதான். அதில் சந்தேகமே இல்லை. நான் ஆவலோடு சுற்றிலும் பார்த்தேன். ராதா பாடிக்கொண்டு ஜன நெருக்கத்திற்கிடையிலே ஒரு கோடியிலே நின்றிருந்தாள். அவள் கையை ஒரு தள்ளாத கிழவன் பிடித்துக்கொண்டிருந்தான்.

நான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு, பலருடைய வசவு வார்த்தைகளையும் பொருட்படுத்தாமல் அவளிருக்கும் இடத்தை நோக்கி நடந்தேன். அவள் முகத்தைப் பார்த்ததும் என்னை யறியாமல் ‘ராதா’ என்று வாய் விட்டுக் கத்திவிட்டேன். வருஷக் கணக்காகப் பார்க்காமல் திடீரென்று அவளை அந்த நிலைமையில் கண்ணுற்றால் யார்தான் கத்தமாட்டார்கள் ?

நான் முதல் முதலில் அவளைப் பார்த்தபோது அவள் குழந்தையாக இருந்தாள். சிரித்த முகம், இளமான் பார்வை, துள்ளிக் குதிக்கும் நடை, பிச்சை எடுப்பதாக உணர்ச்சியே ஏற்படாத பச்சிளம் பருவம்.

அந்தக் காலத்தில் அவள் பிச்சை கேட்பதே ஒரு தனிமாதிரி, “ஐயா-” என்று கையை நீட்டுவாள். அவள் குரலில் கெஞ்சுகின்ற பாவனையே இருக்காது. பிரயாணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/86&oldid=1535128" இலிருந்து மீள்விக்கப்பட்டது