பக்கம்:உரிமைப் பெண்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராதா

83


“எங்கம்மா செத்துப் போய்ட்டாள்; எங்கப்பா இருக்குறாரு. அவருக்கு வேலை செய்ய முடியாது.”

“ஏன்? வயதாய்விட்டதா?”

“ஆமாம்-இத்தனை நாளாக் கூலிவேலை செய்து சம்பாதிச்சார்; இப்போ கையிலாகாது சும்மா இருக்கிறார்."

இப்படிச் சொல்லிக்கொண்டே அவள் போய் விட்டாள். அதிகம் பேசிக்கொண்டிருந்தால் அடுத்த ஸ்டேஷன் வருவதற்குள் எல்லோரிடமும் காசு கேட்க முடியுமா?

ஆனால் நான் அவளைக் காணும் போதெல்லாம் இப்படிச் சில வார்த்தைகளாவது பேசாமல் இருப்பதில்லை. நாங்கள் பேசும்போது அந்தப் பையன் குரல் கேட்கும் திசைப் பக்கமாகக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பான்.

அந்தச் சிறுமிக்கு ராதா என்று பெயரிட்டதும் நான் தான். ஒரு நாள் அவளும், நேத்திரமற்ற அவள் அண்ணனும் துடியலூர் ஸ்டேஷனில் நான் இருந்த ரெயில் வண்டிக்குள் ஏறினார்கள். ரெயில் நகர ஆரம்பித்ததும் அந்தப் பையன், “கண்ணே யிழந்தவன் நீயாே நானோ?” என்று சோகங் கலந்த குரலில் பாட ஆாம்பித்தான். சிந்தாமணி என்ற பேசும் படம் மாதக் கணக்கில் காண்பிக்கப்பட்ட காலம் அது. அன்று நான் வேடிக்கையாக அச் சிறுமியை ராதாவென்று கூப்பிட்டேன். அது முதல் அந்தப் பெயராலேயே அவளை அழைப்பது எனக்கு சகஜமாய்விட்டது.

அவளுக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் என்னவோ நான் கேட்டுக்கொள்ளவே இல்லை. ராதாஎன்ற பெயர் எனக்கும் அவளுக்கும் திருப்தியளித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/88&oldid=1138190" இலிருந்து மீள்விக்கப்பட்டது