பக்கம்:உரிமைப் பெண்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

உரிமைப் பெண்

 அதையே நிலைக்கச் செய்துவிட்டோம். கொஞ்ச நாட்களில் அந்தக் குருட்டுப் பையனுங்கூட அவளை ராதா என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டான்.

இப்படி நான்கு வருஷங்கள் சென்று விட்டன. ரெயில் வண்டி எனது வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாகப் போய்விட்டது. காலையிலும் மாலையிலும் காப்பி யில்லாவிட்டால் எப்படியோ அதுபோல எனக்கு இந்த ரெயில் பிரயாணம் இல்லாவிட்டால் இப்பொழுது என்னவோ மாதிரி இருக்கிறது. மேலும் ராதாவைக் கண்டு பேசுவதும் நான் தினமும் ஆவலோடு எதிர் பார்க்கும் ஒரு செய்கையாய் மாறிவிட்டது.

ஆனால் ராதா இப்பொழுது முன்போலத் தாராளமாக வந்து காசு கேட்பதில்லை. அவள் அந்தக் குருட்டுப் பையன் கையைப் பிடித்துக்கொண்டு வருவாள். அவன் தான் எல்லோரிடமும் காசுக்காகக் கையை நீட்டுவான். அவன் ஒரு குட்டிப் பிரசங்கம் ஒன்றையும் கற்றுக்கொண்டிருக்கிறான். “ஐயா, எனக்கு மாரியாத்தா வந்து ரெண்டு கண்ணும் போய்விட்டது. என்னால் கூலி செய்து பிழைக்க முடியாது. பகவான் என்னை இப்படி என்ன பாவத்திற்காகவோ செய்துவிட்டார். ஆகையால் தாய்மார்களே, தகப்பன்மார்களே, இந்த ஏழைக் கண்ணில்லாத கபோதிக்குத் தருமம் செய்யவேணும். உங்கள் வாய்க்கு வெற்றிலை என் வயிற்றுக்குச் சோறு” என்று சொல்லிவிட்டுக் கும்பிடுவான். மக்கள் மனமிரங்கிக் காசு கொடுப்பார்கள்.

எனக்கு மட்டும் ராதா கையில் காசு கொடுப்பதில் தான் திருப்தி. எவ்வளவு சங்கோஜப்பட்டாலும் என்னிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் அவளும் போவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/89&oldid=1138195" இலிருந்து மீள்விக்கப்பட்டது