பக்கம்:உரிமைப் பெண்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

உரிமைப் பெண்

 முதலிலேயே கண் போனதைப்பற்றிக் கேட்க எனக்கு ஆவலாக இருந்தாலும் துணிவு உண்டாகவில்லை. ராகாவுக்கு அதிக விசனத்தைக் கொடுக்கக்கூடாது என்று எண்ணிக்கொண்டு மெதுவாக, “இந்தத் தள்ளாத கிழவர் யார்?” என்று கேட்டேன்.

“இவர்தான் என் தகப்பனார். முன்பெல்லாம் இவர் குடிசையைவிட்டு வெளியிலேயே வரமாட்டார். சக்தியிருக்கும் வரையில் கூவி ஜீவனம் செய்து எங்களைக் காப்பாற்றினார். பிறகு சக்தியில்லாமல் போகவே குடிசையிலேயே இருந்தார். பிச்சை எடுப்பது ரொம்பக் கேவலம் என்று அதை வெறுத்து வந்தார். ஆனால் என்ன செய்வது? என் அண்ணனும் இறந்து போனான். பிறகு வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது செய்ய வேண்டுமே?”

“ராதா, உனக்கு....ம்...உன்னுடைய கண் எப்படி இப்படியாச்சு?”

“கண்ணா........ அது ஒரு சிப்பாய் எனக்குச் செய்த உபகாரம்.”

“உபகாரமா!”

“ஆமாம். கண்ணிருந்தபோது எனக்கு ஒரு காலணா தருமம் செய்வதென்றாலும் ஜனங்களுக்கு அவ்வளவு பிரியமாயிருக்கவில்லை. இப்போ எல்லோரும் பாவம் குருடி என்று இாக்கப்பட்டுக் காசு கொடுக்கிறார்கள். அதனால் கண்ணைப் போக்கியது உபகாரந்தானே ? பிச்சைக்காரிக்குக் கண் இருந்து என்ன பிரயோசனம்?”

"ஐயையோ, அப்படி நினைக்கலாமா? கண் இருந்தால் ஏதாவது வேலை செய்து பிழைக்கலாமே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/93&oldid=1138223" இலிருந்து மீள்விக்கப்பட்டது