பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நட்புவளர் காதை

அக


உரைசால் மணியர் ஒங்குயர் புலவர்
அரசன் சண்முகர் ஆருயிர் நட்பைப்
பெற்ற முறையோ பெருவியப் பாகும்
முற்றுமந் நட்பை முறையாற் கூறுதும்;
அணிமையில் அமைந்துள மருத்துவ மனைக்கு 5
மனியார் ஒருநாள் வந்தா ராக,
மருத்துவர் அங்கிலர் ஆதலின் வந்தவர்
பொறுத்தவண் இருந்தார்; புல்லிய குடுமியும்
மெய்ப்பை யணியா மேனியும் உடையார்
எய்ப்புடன் ஒருவர் இருந்தார்; அவ்வுழை 10
அடிமைப் பணியாள் அவரென நினைந்து
'குடிநீர் கொஞ்சம் கொணர்க’ என்றனர்;
அவரும் இவர்நிலை அறந்துளம் இரங்கிக்
குவளையில் தண்ணீர் கொடுத்தனர்; பின்னர்ப்
பண்டித மணியார் பசித்தவ ராகி, 15
'உண்டி வாங்கித் தரலும் ஒல்லுமோ ?'
என்றதும் எளியவர் எழுந்துடன் விரைந்து
சென்றது வாங்கித் திரும்பினர்; அவ்வயின்
மருத்துவர் வந்தவர் மகிழ்ந்தனர் கண்டு,
'பொருத்தம் பொருத்தம் புலவர்தம் தொடர்பு! 20
நானே அறிமுகஞ் செய்ய நயந்தேன்
தானே நடந்தது தனிப்பெரு மகிழ்ச்சி’
என்றன ராக, இதுவரை ஈங்கு
நின்றுறு பணிகள் நெஞ்சினில் உவந்து
நன்றுறப் புரிந்தவர் யாரென வினவ 25
அரசன் சண்முகர் ஆமெனல் அறிந்து
பெருமையின் பணிவைப் பெரிதுவந் தனரால்
பெருகி வளர்ந்தது பெட்புறு நட்பே.