பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொதுப்பணிபுரி காதை


இறைவாழுங் கோவிலுக்குள் உரிமை யில்லை
இசையரங்கில் திருமணத்தில் உரிமை யில்லை
துறைதோறும் தமிழ்மொழியின் உரிமை வேண்டித்
தொடருங்கால் மொழிவெறுப்பு, பகமை என்று
பறைசாற்றும் புல்லுருவிக் கூட்ட மொன்று;
பழமரத்தில் அதுவளர விட்டு விட்டோம்;
நறைவாழும் மலரிருக்கக் கள்ளிப் பூவை
நாடியதால் நாம்பெற்ற பலனைப் பாரும்.

3

தமிழ்மொழியில் வெறுப்புடையோர் அதனி டத்துத்
தணியாத பகையுடையோர் எவ்வி டத்தும்
அமுதனய மொழிவளர மனமே யில்லோர்
அயன்மொழியில் வெறுப்பென்றும் பகைமை
   என்றும்
நமையெதிர்த்துப் பழியுரைத்துத் திரிய லுற்றார்
நன்றறிய மாட்டாரும் நம்பு கின்றார்
நமதன்னை நாட்டுக்கு வாழ்வு வேண்டின்
நண்ணுபிற நாட்டின்மேல் வெறுப்பா என்ன?

4

என்சமயம் வாழ்கவென ஒருவன் சொன்னால்
இருந்துவரும் பிறசமய வெறுப்பா என்ன?
என்மொழியிற் பாட்டிசைக்க வேண்டு மென்றால்
எதனிடத்தும் வெறுப்பில்லை; வேண்டு மென்றே
புன்மொழிகள் உரைக்கின்றார் தமிழை மீண்டும்
பூக்கவிடா தொழிப்பதுதான் அவர்தம் நோக்கம்;
வன்முறையில் வாதிடுவார் எந்த நாட்டில்
வாழ்கின்றார்? திமைசெய ஏன்நி னைத்தார் ?

5