பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்தரு காதை

ககரு



வளநடை யதனாற் கட்டுரை வடித்துக்
கோவை இரண்டெனக் கொடுத்தனர் அதன்சுவை
நாவின் உரையால் நவிலுதல் அரிதே;
வேழ முகத்தன் மீதிவர் பாடிய
சூழும் மாலை சொலும்அந் தாதி75
பதிகம் என்பன பாவியல் மாலைகள்;
தனித்தனிப் பாடலும் இனித்திடும் வகையால்
அளித்தனர் ஆயினும் அளவிற் சிறியன;
பாலில் நனைந்தவர் பாவை மிகுத்திலர்
காவியந் திளைத்தவர் காப்பியம் விளைத்திலர்;80
திருவுளம் அதனைச் செயநினைத் திருப்பின்
மற்றுமோர் இளங்கோ பெற்றுயர்ந் திருப்போம்
அப்பெரும் பேற்றை அடைந்தோம் அல்லோம்
எப்பொழு ததனே எய்துவம் யாமே?
அயன்மொழி கற்றோர் அரைகுறைப் புலத்தால்85
மயல்மீக் கூர்ந்து வண்டமிழ் மொழியில்
ஒன்றும் இல்லை என்று வெறும்வாய்
மென்று திரிவார் மேவார் போல;
நன்றெனக் கண்டதை நற்றமிழ் மொழியிற்
பெயர்ப்பான் வேண்டிப் பேரிடர்ப் படுவார்90
உயிர்ப்பார் அவர்தாம் உயரிய தாய்மொழி
கல்லா ராகிக் கலங்கி நின்று
பொல்லா நடையாற் புனைகுவார் தமிழென;
எதையும் ஏற்கும் இளகிய தமிழகம்
அதையும் ஏற்கும் அமைதியின் நின்றே;95
பண்டித மணியார் பைந்தமிழ்ப் பயிற்சியும்
பண்டை வடமொழிப் பயிற்சியும் ஒருங்கே